சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் சசிகலாவுக்கு விதியை மீறி சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்பட்டதை சிறைத் துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா அதிரடி சோதனை நடத்தி கண்டு பிடித்தார். இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள், தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலாவுக்கு சலுகை வழங்குவதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் ரூபா குற்றம் சாட்டினார். இதை டி.ஜி.பி. சத்திய நாராயணா மறுத்தார். இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் ஜெயிலுக்குள் சென்று விசாரணை நடத்தினார்கள். முன்னதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பெங்களூர் மாநகர போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபா நேற்று முன்தினம் கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவிடம் புதிய வீடியோ ஆதாரம் ஒன்றை அளித்துள்ளார். சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் மத்திய சிறை வளாகத்தில் இருந்து உயர் அதிகாரிகளின் உதவியுடன் சசிகலா, இளவரசி ஆகியோர் வெளியில் சென்று திரும்பும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்த வீடியோ ஆதாரத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் சில பைகளுடன் சிறையின் பிரதான வாயிலில் ஆண் காவலர்கள் முன்னிலையில் நுழைகின்றனர். அப்போது பெண்கள் சிறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு பாதுகாப்பாக உடன் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே சென்றுவிட்டு உள்ளே வருவது போன்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணா ஓய்வு பெற்ற ஜூலை 31-ந் தேதிக்குப்பின் விசாரணைக்கு ஆஜராகும் படி ரூபாவுக்கு ஊழல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி ரூபா விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை அளித்தார்.

இது பற்றி டி.ஐ.ஜி. ரூபாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ஆண் காவலர்கள் பெண்கள் சிறை வளாகத்துக்குள் செல்ல அனுமதியில்லை. அவர்கள் பெண்கள் சிறையின் வெளியில் பிரதான வாயிலில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். இங்கு ஆண் காவலர்கள் சசிகலாவுக்கு பாதுகாப்பாக வந்திருக்கிறார்கள். சசிகலா எங்கிருந்து வந்தார். அவரை யார் அனுமதித்தார்கள் என்பது விசாரிக்கப்பட வேண்டும்.

சிறைத்துறையின் தரவு தளத்தில் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. பண ஆதாயத்துக்காக குற்றவாளிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது தெளிவாகிறது. இது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்படி குற்றம் ஆகும். பெண்கள் சிறையின் உள்ளேயும், வெளியேயும் ஆண் காவலர்கள் இல்லை. எனவே வெளியில் உள்ள சாலையில் இருந்து சிறைக்குள் நுழையும் பிராதன வாயில் வழியாகத் தான் இவர்கள் வந்துள்ளனர்.

இது தொடர்பாக நான் அறிக்கையில் குறிப்பிட்டு வீடியோ ஆதாரத்தை ஆய்வு செய்து எந்த கேமராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் எவ்வாறு வெளியில் சென்று வந்தனர் என்பதை விசாரிக்கும் படி ஊழல் தடுப்பு பிரிவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

கைதிகள் பார்வையாளர்களை சந்திக்கும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சசிகலா எந்த ஒரு பார்வையாளரையும் சந்தித்த பதிவை காண முடியவில்லை. எனவே சசிகலாவை சந்திக்க வந்த பார்வையாளர்களையும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.