ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் : கூடுதல் பாதுகாப்பிற்கு துணைக் காவற்படை  நியமிக்க ஆலோசனை

0
14

கோலாலம்பூர், ஜூன் 16-

பத்துமலையில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைமைச்  செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட ஆறு  பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும். இக்கூட்டத்தில் அரச மலேசிய போலீஸ்  படையின் அதிகாரிகளும், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின்  நிர்வாகஸ்த்தினரும் கலந்துக்கொண்டனர்.

ஏழு பேர் அடங்கிய காவற்படைக் குழுவை புக்கிட் அமானின்  குற்றவியல்
தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு துணை ஆணையர் டத்தோ. தேவ் குமார் தலைமை
ஏற்றார். அவருடன் டாங் வாங்கி மற்றும் கோம்பாக் வட்டார போலீஸ் அதிகாரிகள்
கலந்துக்கொண்டனர்.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் சார்பில், டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுடன், செயலாளர் திரு. சேதுபதி, பொருளாளர் திரு. அழகன், அறங்காவலர்  டத்தோ.. சிவகுமார், தலைமைப் பாதுக்காப்பு அதிகாரி ஆகியோர்  கலந்துக்கொண்டனர்.

அண்மையில் காவல்துறையினர் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய    நால்வரை கைது செய்ததை அடுத்து   வழிபாட்டுத் தலங்கள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு  உள்ளாகி இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ மகா மாரியம்மன்  கோவில் தேவஸ்தானம், தங்கள் கோவில்களில் பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ்  உதவவேண்டும் என்ற கோரிக்கையை போலீஸ் படைத் தலைவர் ( IGP ) டத்தோ ஸ்ரீ  அப்துல் ஹமீத் படோரிடம் முன்வைத்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த  உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது என்று தேவஸ்தானத்தின் பொதுத் தொடர்பு  வியூக இயக்குனர் திரு. சிவகுமார் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தின் முடிவில் ஆறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

முதலாவதாக, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் பத்துமலைத் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம், கோலாலம்பூர் மகா மாரியம்மன் ஆலயம்  மற்றும் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவில் ஆகிய மூன்று ஆலயங்களிலும் துணை  காவற்படை அமைப்பதாகும்.

தொடர்ந்து, துணை ஆணையர் தேவ் குமார், இம்மூன்று கோயில்களிலும் கூடுதல்  ரோந்து சுற்றுகளை ஏற்படுத்துதல், ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ்  அதிகாரிகளுக்கு ரோந்துப் பதிவு புத்தகத்தை ஏற்படுத்தவும் பரிந்துரைத்தார். ஏற்கனவே இரண்டு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.சிவகுமார் மேலும் குறிப்பிடுகையில், தகவல் சேகரிப்பதற்கும் கண்காணிப்புப் பணிகளுக்கும் ரகசிய போலீசாரை நியமிப்பதற்கு துணை ஆணையர்  தேவ் குமார் ஒப்புக்கொண்டார் எனவும் கூறினார்.

அடுத்தபடியாக, தொண்டூழியப் பாதுகாப்பு படையினரை கூட்டத்தைக்  கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தும் பரிந்துரை முன்வைக்கப் பட்டது.

தங்களது கோரிக்கையை ஏற்று, ஆக்ககரமான பரிந்துரைகளை முன்வைத்த காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு டான்ஸ்ரீ. ஆர். நடராஜா தமது  நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

காவல்துறை எப்பொழுதுமே தேவஸ்தானத்திற்கு உறுதுணையாக இருந்து, கோயில்களில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த உதவி வருகிறது. குறிப்பாக தைப்பூசம் போன்ற திருவிழாக்காலங்களில் காவல்துறையின் பங்கு அளப்பரியது
என்று திரு. சிவகுமார் கூறினார்