அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > யூஇசி அங்கீகாரம்: கால தாமதம் ஏன்? – கெராக்கான் கேள்வி
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

யூஇசி அங்கீகாரம்: கால தாமதம் ஏன்? – கெராக்கான் கேள்வி

கோலாலம்பூர், ஜூன் 18-

யூஇசியை அங்கீகரிப்பது மீதான ஆய்வறிக்கை ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்  என்று இதற்கு முன்பு வாக்குறுதி அளித்த கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லீ அவ்வறிக்கை ஆகஸ்ட் மாதம்தான் தயாராகும் என்று இப்போது  காலங்கடத்துவது ஏமாற்றமளிக்கிறது என்று கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு  யூஇசியை அங்கீகரிப்பதாக பக்காத்தான் ஹராப்பான் வாக்குறுதி அளித்த வேளையில் அரசாங்கத்தை அமைத்தவுடன் அது அங்கீகரிக்கப்படும் என்று ஜ.செ.க உறுதியளித்தது. ஆனால், ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு நிறைவுற்ற போதிலும் யூஇசியை அங்கீகரிப்பதில் இன்னும் உறுதியற்ற நிலையே நிலவுகிறது என்றார் டோமினிக் லாவ்.

பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தைக் கைப்பற்றி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. ஆயினும், யூஇசி இன்னும் அங்கீகரிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. யூஇசி என்று குறிப்பிட்டவுடன் சிலர் முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் 60 ஆண்டு காலத்தில் அங்கீகரிக்காத ஒன்றை பக்காத்தான் அரசாங்கம்  ஓராண்டில் அங்கீகரிப்பது எப்படி சாத்தியமாகும்  என்று வினவுகின்றனர்.

யூஇசியை அங்கீகரிக்க வேண்டும் என்று நடப்பு  அரசாங்கத்தை வற்புறுத்துவது அர்த்தமற்றது என்று இவர்கள்  கூறுகின்றனர். ஆனால் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. யூஇசி உடனடியாக அங்கீகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தவர்கள் பக்காத்தான் தலைவர்களே என்று டோமினிக் லாவ் அறிக்கை ஒன்றின் வழி சுட்டிக் காட்டினார்.

60 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த தேசிய முன்னணி அரசாங்கம் யூஇசியை அங்கீகரிக்கவில்லை என்பது  மறுக்க முடியாது உண்மை. ஆனால், அதற்கான தண்டனையாக தேர்தலில் சில மாநிலங்களை தேசிய முன்னணி இழந்ததோடு மத்திய அரசாங்கமும் அதன் கையை விட்டுச் சென்றது. அதைத் தொடர்ந்து கெராக்கான் தேசிய முன்னணியை விட்டு விலகி சுயேச்சை கட்சியாக தனித்து செயல்படுகிறது. தேசிய முன்னணியின் வழியை பக்காத்தான் கூட்டணி நிச்சயம்  பின்பற்றாது என்று கெராக்கான் நம்புவதாக அவர் சொன்னார்.

இதனிடையே, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் பொது மக்களைத் தூண்டாமலும் தவறாக வழிநடத்தாமலும் இருக்குமேயானால்  யூஇசி மீதான சிறப்பு செயற்குழு தனது ஆய்வறிக்கையை  அமைச்சரவையிடம் சமர்ப்பித்து இது அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்  என்று மக்களவை  துணை சபாநாயகர் ஙா கோர் மிங் கூறியுள்ளார். யூஇசி அங்கீகாரம் இறுதியில் அமல்படுத்தப்படாமல் போகுமேயானால்   பழிச் சொல்லில்  இருந்து தப்பிப்பதற்கு   பக்காத்தான் கூட்டணி அரசாங்கம் தயாராகி வருகிறது என்பதை ஙாவின்  இந்த சாக்குப் போக்கு தெளிவாகக்  காட்டுகிறது  என்று டோமினிக் லாவ் கூறினார்.

“பக்காத்தான் கூட்டணிதான் இன்றைய அரசாங்கமாக இருக்கிறது என்பதை ஙாவிற்கு நான் நினைவுறுத்த விரும்புகிறேன். யூஇசியை அங்கீகரிப்பதோ, அங்கீகரிக்காமல் போவதோ பக்காத்தான் அரசாங்கத்தைப் பொறுத்ததாகும். இதற்காக அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியெனில், ஆட்சி அதிகாரத்தை அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளிடம் விட்டுக் கொடுத்திடலாமே” என்றார் அவர்.

யூஇசி அங்கீகாரம் என்பது ஒரு கல்வி விவகாரம். அதை நிபுணத்துவ கல்வி கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அதனை  அங்கீகரித்தால் நாட்டிற்கு ஏற்படும் நன்மைகளை பரிசீலீக்க வேண்டும் என்று டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.

யூஇசி அங்கீகரிக்கப்பட்டால் அது நாட்டிற்கு பல்வேறு அனுகூலங்களைக் கொண்டு வரும் என்றும் நாட்டின் திறனாற்றலை இதன் வழி  தக்க வைக்கமுடியும் என்றும் டோமினிக் லாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன