அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்!

பினாங்கு ஜூன் 18-

மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் உன்னத நோக்கத்தின் பேரில் அத்தரப்பினருக்கான விசேட வேலை வாய்ப்பு முகாம் எதிர்வரும் ஜூன் திங்கள் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் காலை 11.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரையில், செபராங் பிறை அரேனா கான்வென்ஷன் செண்டர் ( Seberang Perai Arena Convention Centre) நடைபெறவிருக்கிறது.

பினாங்கு மாநில அரசின் ஏற்பாட்டில் அதன் துணை முதல்வர் பேராசிரியர் ப.ராமசாமியின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாம்,பென் எக்ஸ்போ இவெண்ட்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் என்ற அமைப்பின் ஆதரவுடன் இடம்பெறவிருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகள் திரளாகக் கலந்து கொண்டு பயனடையுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

மாநிலத்திலுள்ள பற்பல தனியார் துறைகளின் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை ஈடுபடுத்தும் தலையாய நோக்கத்தின் பேரில் இந்த வேலை வாய்ப்பு முகாம் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அன்றைய தினம் மாற்றுத் திறனாளிகளை வர்த்தகத் துறையில் ஈடுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் அறிமுகப்படுத்தப்படுமென்று, துணை முதல்வர் ராமசாமி இங்கு நடத்தப்பட்ட செய்தியாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகளின் பேரில் மாநில அரசு கொண்டிருக்கும் அக்கறை உணர்வை இந்த முகாம் தெள்ளனவே சமூகத்திற்கு படம் பிடித்துக் காட்டுவது திண்ணமென்றும் உறுதி கூறிய ராமசாமி,  இந்த திறந்த நிலையிலான வேலை வாய்ப்புச் சந்தையில் மாற்றுத் திறனாளிகள் போட்டி போட்டிக் கொண்டு தங்கள் முன்னேற்றத்தை நிலை நாட்டிக் கொள்வதற்கு இஃது சிறந்ததொரு வாய்ப்பு என்பதிலும் ஐயமில்லையென்று குறிப்பிட்டார்.

மாநிலத்தின் பற்பல வர்த்தக நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் அரங்கேறவிருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் தங்கள் நல்லாதரவை வழங்கும் பொருட்டு, தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வண்ணம் ஆர்வமுள்ளவர்கள் பேராசிரியார் ராமசாமியின் சிறப்பு உதவியாளர்களான திரு யோகநாதன் அல்லது திரு விக்னேஸ்வரன் ஆகிய இருவருடன் 04-2629930 அல்லது 017-4494413 ஆகிய தொலைத் தொடர்பு எண்களின் வாயிலாக தங்கள் பங்கேற்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன