அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிகேஆர் கட்சியில் பிளவு இல்லை! -டத்தோ ஶ்ரீ அன்வார்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பிகேஆர் கட்சியில் பிளவு இல்லை! -டத்தோ ஶ்ரீ அன்வார்

பெட்டாலிங் ஜெயா ஜூன் 18-

டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலியின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பிகேஆர் கட்சியில் எந்த பிளவும் இல்லை என அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

பிகேஆர் வழக்கம்போல ஒற்றுமையுடன் சிறப்பாக செயல்படுகின்றது. எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை என மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனம் (மிம்கோயின்) ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிகேஆர் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சில தரப்பினர் கூறி வரும் நிலையில் அதில் உண்மையில்லை என அவர் தெரிவித்தார். முன்னதாக நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை திறந்து வைத்து உரையாற்றிய அவர், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருவதையும் குறிப்பிட்டார்.
மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு பிரதமருடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

எங்களின் அழைப்பை ஏற்று இந்த பொது உபசரிப்பில் கலந்துகொண்ட டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஜமருள் கான் கூறினார்.

இந்த திறந்த இல்ல உபசரிப்பில் மலேசியாவில் முதன்மை தொழில் துறையில் ஈடுபட்டு வரும் மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அயூப் கான், ஏசான் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அப்துல் அமிட் உட்பட பெரும்பாலான இந்திய முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இந்த பொது உபசரிப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிக்கரம் நீட்டிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் டத்தோ ஶ்ரீ அன்வார் நினைவுப் பரிசு வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன