அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மீண்டும் வருகிறதா தமிழ்நேசன்? பரிதவிக்கும் முன்னாள் ஊழியர்கள்
சமூகம்முதன்மைச் செய்திகள்

மீண்டும் வருகிறதா தமிழ்நேசன்? பரிதவிக்கும் முன்னாள் ஊழியர்கள்

கோலாலம்பூர் ஜூன் 18-

தென்கிழக்காசியாவிலேயே மிகவும் பழமையான நாளிதழான தமிழ் நேசன் இவ்வாண்டு ஜனவரி மாதத்துடன் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அந்த நிறுவனம் எதிர்நோக்கி வந்ததால் இனியும் சேவையை தொடர முடியாது என நிர்வாகம் முடிவு செய்தது.

பின்னர் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழ்நேசன் மீண்டும் வெளிவரக் கூடும் என பரவலாகப் பேசப்பட்டது. இச்சூழ்நிலையில் இன்று காலை தொடங்கி மீண்டும் தமிழ்நேசன் வெளிவரவிருப்பதாகவும் அதற்கு தலைமை ஆசிரியராக மக்கள் ஓசை நாளிதழின் மூத்த செய்தியாளரான கு.தேவேந்திரன் பொறுப்பேற்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

முதன்மையாக மூன்று பங்குதாரர்கள் தமிழ்நேசனை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதில் ஒருவர் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கட்சியின் தலைவர் என்றும் கூறப்பட்டது.

மீண்டும் தமிழ்நேசன் விற்பனைக்கு வருவது அதன் வாசகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்றது. தமிழ் ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இத்தருணத்தில் பல ஆண்டு காலமாக தமிழ் நேசனில் வேலை செய்த பணியாளர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை என்பது மிக வருத்தமான செய்தியாக உள்ளது.

ஜனவரி மாதம் தமிழ்நேசன் நிறுத்தப்படும் என்ற செய்தி வெளிவந்த பிறகு அங்கிருந்த பணியாளர்களுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாத ஊதியம் வழங்கப்படும் என உறுதி கடிதம் அளிக்கப்பட்டது. பிப்ரவரி மாத சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் மார்ச் மாத சம்பளம் இதுநாள் வரை வழங்கப்படவில்லை.

இதை மேற்கோள்காட்டி சில ஊழியர்கள் மாநில அரசாங்கத்திடம் புகாரை தெரிவித்திருக்கிறார்கள். அதோடு வழக்கையும் பதிவு செய்துள்ளனர். தமிழ்நேசன் பணியாளர்கள் யூனியன் அமைப்பின் கீழ் செயல்படுவதால் அவர்கள் நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல ஆண்டுகள் தமிழ் நேசனின் மேம்பாட்டிற்காக உழைத்த ஊழியர்களுக்கு இதுநாள் வரை எந்த இழப்பீடும் வழங்கப்படாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன