செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது: நிதி ஆயோக் எச்சரிக்கை !
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது: நிதி ஆயோக் எச்சரிக்கை !

புது டில்லி, ஜூன்.20 –

இந்திய தலைநகர் புது டில்லி, சென்னை, பெங்களூரு உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது நிதி ஆயோக்.

தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். லாரி தண்ணீருக்காக நள்ளிரவு முதல் மறுநாள் வரை காத்துகிடக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து நிதி ஆயோக் அமைப்பு ஆய்வுசெய்து வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், நாட்டின் தலைநகரான தில்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது எனவும், இதனால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீத பேருக்கு குடிநீர் வசதி இருக்காது. பிற நகரங்களைவிட, சென்னையில் சிறந்த நீர் ஆதாரங்கள் மற்றும் மழைப்பொழிவு இருந்தபோதிலும், சென்னையில் உள்ள 3 ஆறுகள், 4 நீர் நிலைகள், 5 சதுப்பு நிலங்கள், 6 வனப்பகுதிகள் ஆகியவை தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் அதிக செலவு பிடிக்கும் என்பதால், மழைநீரை சேமிக்க கவனம் செலுத்த வேண்டும். மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்ய அரசும், நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தேசிய தண்ணீர் அகாடமியின் முன்னாள் இயக்குநர் மனோகர் குஷலானி பேசுகையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு நம்பியுள்ளது. ஆனால் பூமி என்பது வரையறுக்கப்பட்ட கிரகம் என்றும், கடல்நீரும் ஒரு நாள் வறண்டு போகும் என்பதை மறந்து விடக்கூடாது.

நம்மிடத்தில் நிறைய பணம் உள்ளது, ஆனால் நம் குழந்தைகளிடம் தண்ணீருக்கு பதிலாக பணத்தை குடிக்க சொல்ல முடியாது. நீரை சேமிப்பதற்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒரு தீர்வாகாது. நீரை சேமித்தல் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் ஆகியவை அரசு மற்றும் மக்களுக்கு உள்ள கூட்டு பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன