செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > நடிகர் சங்கத் தேர்தல் ரத்து: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!
இந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

சென்னை, ஜூன்.20 –

நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தத்தை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தில் இருந்து உறுப்பினர்கள் 61 பேர் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் 23-ஆம் தேதி நடைபெற இருந்த சங்கத்தின் தேர்தலை நிறுத்த தென் சென்னை சார் பதிவாளர் நேற்று உத்தரவிட்டார்.

2019 – 2022-ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், வரும் 23-ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்தத் தேர்தலில், தற்போது பதவியில் இருக்கும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் எதிரும் புதிருமாக போட்டி களத்தில் குதித்தன. இரு அணிகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன.

உறுப்பினர் பதவியில் இருந்து தங்களை முறைகேடாக நீக்கியதாக பாரதிபிரியன் உள்ளிட்ட 61 பேர் சங்கப் பதிவாளரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து தென் சென்னை சார் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: விஷால் அளித்த விளக்கத்தில் 44 உறுப்பினர்கள் தொழில்முறை உறுப்பினர் பதவியிலிருந்து தொழில்முறை அல்லாத உறுப்பினர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், 4 உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், 13 உறுப்பினர்கள் தொழில்முறை உறுப்பினர்களாகத் தொடர்வதாகவும், அவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேற்படி நபர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைத்து இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உள்ள உறுப்பினர்களின் பட்டியல் இறுதி செய்ய வேண்டியுள்ளது. 2017- 2018-ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் பட்டியலின் கோர்வை தென்சென்னை மாவட்டப் பதிவாளரிடத்தில் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ள நிலையில், எந்த ஆண்டின் உறுப்பினர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடைபெறுகிறது என்பதும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. மேலும், கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. 2018 நவம்பரில் இருந்து 6 மாத காலத்துக்குத் தேர்தலைத் தள்ளிவைத்து, சங்கக் கட்டடப் பணி முடிவடைந்தவுடன் 2019 ஏப்ரலில் தேர்தல் நடத்த பொதுக்குழுவிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்தக் கால நீட்டிப்பு காலத்துக்குள் தேர்தலை நடத்தாமல், காலம் தாழ்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த பிறகு, தேர்தல் நடத்துவது தொடர்பாக அவர்கள் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில், சங்கத் தேர்தலை நடத்துவது ஏற்புடையதாக இருக்காது. எனவே இதுகுறித்துத் தீர்வு காணும் வரை, தேர்தல் குறித்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ஆணையிடப்படுகிறது என சார் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தேர்தல் வாக்குப்பதிவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோர முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதற்கு மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் கிருஷ்ணா எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தத்தை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன