அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > கோப்பா அமெரிக்கா – காலிறுதிக்குத் தகுதிப் பெற்றது பிரேசில் !
விளையாட்டு

கோப்பா அமெரிக்கா – காலிறுதிக்குத் தகுதிப் பெற்றது பிரேசில் !

சவ் பவ்லோ, ஜூன்.23 –

ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள பிரேசில், 2019 கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளது. சனிக்கிழமை நடந்த ஏ பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் பிரேசில் 5 – 0 என்ற கோல்களில் பெருவைத் தோற்கடித்தது.

ஏ பிரிவில் முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் பிரேசில் அதன் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை சம்பாதித்திருந்தது. எனினும் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் மீண்டும் தனது பழைய அதிரடி ஆட்டத்துக்குத் திரும்பியுள்ளது. இந்த வெற்றியின் மூலம், ஏ பிரிவில் பிரேசில் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.

12 ஆவது நிமிடத்தில் காஸ்மிரோ, பிரேசிலின் முதல் கோலைப் போட்டார்.  முதல் பாதி ஆட்டம் முடிவடைதற்கு முன்னர், ரோபேர்ட்டோ பிர்மின்ஹோ, எவெர்டன்  போட்ட இரண்டு கோல்களில் பிரேசில் 3 – 0 என்ற கோல்களில் முன்னணிக்கு வந்தது. இரண்டாம் பாதியில் டானி ஆல்வேஸ், விலியன் மேலும் போட்ட இரண்டு கோல்களின் வழி பிரேசில் 5 – 0 என்ற கோல்களில் வெற்றி பெற்றது.

பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் தமது ஆட்டக்காரர்கள் மீண்டும் பழைய ஆட்டத் தரத்திற்குத் திரும்பியது தமக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக பயிற்றுனர் டீட்டே தெரிவித்தார். முதல் பாதி ஆட்டத்தில் வேகமாக ஆட்டத்தை அணுகியதால்,   பிரேசில் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடிந்ததாக டீட்டே தெரிவித்துள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன