அனைத்துலக யோகா தின ஏற்பாட்டில் பத்துமலைக்கு பாராட்டு!

கோலாலம்பூர், ஜூன் 25-

5ஆவது உலகளாவிய யோகா தின கொண்டாட்டத்திற்கு சிறந்த சூழலையும் வசதிகளையும் ஏற்பாடு செய்து பத்துமலை பாராட்டுதல்களைப்பெற்றது.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ. ஆர். நடராஜா, எப்பொழுதும் ஆதரவாக இருந்துவருகிறார். இவ்வாண்டும் தவறாது ஆதரவளித்து 5 -வது அனைத்துலக யோகா தினம் வெற்றியடைய உதவியுள்ளார். அவருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று மலேசியாவிற்கான இந்திய தூதர் மேதகு. ஸ்ரீ. மிர்துல் குமார் தமது உரையில் குறிப்பிட்டார்.

சுமார் 2000 பேர் கலந்துக் கொண்ட 5 -வது அனைத்துலக யோகா தின கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்க இந்தியத் தூதர் மேதகு திரு.மிர்துல் குமார் வந்திருந்தார். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகமாகும்.

இவ்வாண்டு பத்துமலையில் நடந்த அனைத்துலக யோகா தினம் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. யோகா பயிற்சியின் தொன்மையையும் ஆழ்ந்த உண்மைகளையும் உணர்ந்து செயல்பட்டால் ஆரோக்யமான வாழ்க்கையை வாழலாம் என்று மேதகு. மிர்துல் குமார் தமது உரையில் குறிப்பிட்டார்.

அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் பொதுமக்கள் வரத் துவங்கிவிட்டனர். பத்துமலை வளாகத்தில் திறந்த வெளியில் சிவப்பு நிற கம்பளம் விரித்து ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் யோகா பயிற்சி செய்வதற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்.

இந்த நிகழ்ச்சி இந்தியத் தூதரகத்தின் சமூக விவகார ஆணையர் திரு. நிஷித் குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. பத்துமலையை நிர்வாகம் செய்யும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் இட வசதியை செய்து உதவியது. மலேசியாவிற்கான இந்தியத் தூதர் மேதகு திரு.மிர்துல் குமார் அவர்களால் அதிகாரப் பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது.

சரியாக 7.30 மணிக்கு இந்திய கலாச்சார மையத்தின் யோகா பயிற்றுனர் திரு. கேமச்சந் குப்தா, யோகா பயிற்சியைத் தொடங்கி வழிநடத்தினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல்வேறு இனத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர், மற்றும் வயதில் மூத்தவர்கள் என்று எவ்வித பேதமின்றி அனைவரும் யோகா பயிற்சியை ஆர்வத்துடன் செய்தனர். மிகவும் தொன்மை வாய்ந்த யோகக் கலை நமது உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, உடல் உயிர் சிந்தனை ஆகியவற்றை ஒருநிலைப்படுத்தவும் உதவுகிறது.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு. பிரபாகரன் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். உலக பிரசித்தி பெற்ற பத்துமலை அடிவாரத்தில், உலகிலேயே மிகவும் உயரமான முருகப்பெருமானின் சிலைக்கு ( 140 அடி ) அருகில் ஆயிரக்கணக்கானவர்களுடன் ஒன்று சேர்ந்து யோகா பயிற்சி செய்தது அனைவர்க்கும் உற்சாகத்தைக் கொடுத்தது.

இதை எல்லாம் விட, பத்துமலை தமிழ் பள்ளி மாணவர்களின் யோகா செயல்முறை சாகச காட்சி இந்நிகழ்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. வந்திருந்த பிரமுகர்களும் மற்ற அனைவரும் வியப்படைந்தனர். அவர்களின் ஒவ்வொரு சாகசமும் அனைவரின் கைதட்டலையும் பெற்றது. பின்னர், அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் போது இந்திய தூதர் மேதகு. ஸ்ரீ. மிர்துல் குமார் மாணவர்களையும் பயிற்றுநரையும் வெகுவாகப் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரின் துணைவியார் திருமதி. சுனிதா, இந்தியத் தூதரகத்தின் சமூக விவகார அதிகாரி திரு. நிஷித் குமார், இந்திய கலாச்சார மையத்தின் இயக்குனர் திரு. அய்யனார், பத்துமலை ஆலயத்தின் தலைமை நிர்வாகி திரு. பாலகுரு, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் திரு. கிரிஷ்ணமுர்த்தி மற்றும் பொது தொடர்பு வியூக இயக்குனர் டத்தோ. சிவகுமார், கோபியோ தலைவர் திரு. செல்வராஜூ ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.