நம்மை நாமே அங்கீகரிப்போம்! விருதுகள் வழங்கி கௌரவிப்போம்! – எம்பி ராஜா பரிந்துரை

செலாயாங்,  ஜூன் 25-

மலேசிய இந்தியர்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்காக பாடுபட்ட மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர்களின் பெயர்களில் இக்கால தலைமுறைக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டுமென சிலாங்கூர் மாநில தலைவர் எம்பி ராஜா கோரிக்கை வைத்தார்.

அண்மையில் சிலாங்கூர் மாநில மலேசிய இந்திய காங்கிரசின் ஆண்டுக் கூட்டம் மிக விமர்சையாக நடந்தது. இதற்கு தலைமை ஏற்ற கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கட்சியின் மேம்பாட்டிற்கும் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட முன்னாள் தலைவர்களுக்கு கௌரவம் செய்தார். இந்த நடவடிக்கை வந்திருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

வரும் காலங்களில் மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர்களின் பெயரில் விருதுகள் வழங்கி இக்கால தலை முறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென எம்பி ராஜா பரிந்துரை செய்தார். மூத்த தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதில் கட்சியின் தேசிய தலைவர் உறுதியாக இருக்கின்றார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த விருது விழா நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

கடந்த முறை ஆட்சி அதிகாரத்தில் நாம் இருந்தபோது கட்சியில் பணியாற்றியவர்களுக்கு அரசாங்க விருதுகளை பெற்றுத் தந்தோம். இப்போது அந்த சூழ்நிலை இல்லை என்றாலும் நமது கட்சிக்காரர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் நமது கட்சி மிகப்பெரிய உருமாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. சிலாங்கூர் மாநிலத்தை பொறுத்தவரை கட்சியின் உறுப்பினர்களாக ஒரு லட்சம் பேர் இருக்கின்றார்கள். டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், ஒரு கிளையில் 60 பேர் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். இந்த நடைமுறை அதிகமான கிளைகளை உருவாக்கும். அதோடு புதிய உறுப்பினர்களையும் அடையாளம் காண்பதற்கு உறுதுணையாக இருக்கும் என அவர் புகழாரம் சூட்டினார்.

செயல்படாத உறுப்பினர்கள் இனி கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதில் தேசிய தலைவர் உறுதியாக இருக்கின்றார். அந்த உறுதியானது நமது கட்சியை வலுப்படுத்தும் என எம்பி ராஜா கூறினார். நாம் இப்போது எதிர்க்கட்சியாக இருந்த போதும் மக்களின் தேவைகளை அறிந்து தொடர்ந்து உதவிகளை புரிந்து வருகின்றோம். மலேசிய இந்திய காங்கிரஸ் மீது இந்திய சமுதாயத்திற்கு மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது. அந்த நம்பிக்கைக்கு காரணமானவர் கட்சியின் தேசிய தலைவர் என்றால் அது மிகையாகாது.

சிலாங்கூர் மாநில பேராளர் மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் சிலாங்கூர் மாநில உறுப்பினர்களுக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அதோடு சிலாங்கூர் மாநில பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்த தேசியத் தலைவருக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு அவரோடு சிலாங்கூர் மாநிலம் தோள் கொடுத்து தொடர்ந்து பயணிக்கும் என அவர் உறுதியளித்தார்.