3 ஆண்டுகளுக்கு மேல் பிரதமர் பதவியில் இருக்க மாட்டேன்! – டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர் ஜுன் 25-

3 ஆண்டுகளுக்கு மேல் தாம் பிரதமர் பதவியில் நீடிக்கப் போவதில்லை என துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். திட்டமிட்டபடி டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பதவியை ஒப்படைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமக்குப் பிறகு பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவி ஏற்கும் வகையில் மூன்றாண்டுகளுக்கு பின் விலகப்போவதாக வாக்குறுதி வழங்கியிருப்பதாகவும் இதனை நிச்சயம் நிறைவேற்றுவேன் என பேங்காக்கில் சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் டாக்டர் மகாதீர் கூறினார்.

மலேசியாவின் கடனை 80 விழுக்காடு குறைக்கும்வரை நீங்கள் பிரதமர் பதவியில் இருப்பீர்களா என சி.என்.பி.சி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது 3 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்க மாட்டேன் என டாக்டர் மகாதீர் மறுமொழி தெரிவித்தார்.

என்னை பொறுத்தவரை நான் பதவி விலகியவுடன் அன்வார் எனக்குப் பிறகு பிரதமராக வரவேண்டும் என்ற வாக்குறுதியை வழங்கியிருக்கிறேன். அந்த வாக்குறுதியை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என டாக்டர் மகாதீர் கூறினார்.

பதவியில் இருந்து விலகினாலும் கூட நாட்டின் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தாம் தொடர்ந்து பங்காற்றி வரப் போவதாகவும் அவர் சொன்னார். அதிகாரப் பரிமாற்றம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கப் போவதாக டாக்டர் மகாதீர் கூறியிருந்தாலும் இதற்காக கால அவகாசம் எதனையும் அவர் நிர்ணயிக்கவில்லையென கூறப்படுகிறது.

நம்பிக்கை கூட்டணியின் சீரமைப்புக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக டாக்டர் மகாதீர் ஐந்து ஆண்டு முழு தவணை காலம் பிரதமராக இருக்க வேண்டுமென நம்பிக்கை கூட்டணிக்குள் சில தரப்பினர் கருதுகின்றனர். அதிகார பரிமாற்றம் சுமுகமாக நடைபெறும் என கடந்த பிப்ரவரி மாதம் அன்வார் மறு உறுதிப்படுத்தினர்.

பிரதமர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்க மாட்டார் என்பதோடு சிரமமான சூழ்நிலையில் சிறந்த முறையில் டாக்டர் மகாதீர் நிர்வாகத்தை நடத்தி வருவார் என அன்வார் கூறியிருந்தார். அதிகாரத்தை அன்வாரிடம் ஒப்படைப்பதற்கு தெளிவான உடன்பாடு எதுவும் காணப்படவில்லை என டாக்டர் மகாதீரின் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த டாக்டர் ரய்ஸ் யாத்திம் வார
இறுதியில் கூறியிருந்தார்.

2018ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நம்பிக்கை கூட்டணியிடம் வழங்கிய வாக்குறுதிக்கு ஏற்ப பிரதமர் டாக்டர் மகாதீர் அதிகாரத்தை தம்மிடம் ஒப்படைப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இருக்காது என நேற்று இரவு டத்தோ ஶ்ரீ அன்வார் கூறியிருந்தார்.