அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அஹ்மாட் சாஹிட் மீது மேலும் 7 புதிய குற்றச்சாட்டுகள் !
முதன்மைச் செய்திகள்

அஹ்மாட் சாஹிட் மீது மேலும் 7 புதிய குற்றச்சாட்டுகள் !

கோலாலம்பூர், ஜூன்.26-

முன்னாள் துணைப் பிரதமரும், அம்னோ கட்சியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி மீது இன்று கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் மேலும் 7 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வி.எல்.என் எனப்படும் வெளிநாடுகளுக்கான விசா திட்டத்தில், ஒரு நிறுவனத்திடம் இருந்து, 42 லட்சத்து 40 ஆயிரம் சிங்கப்பூர் டாலரை லஞ்சமாகப் பெற்றது தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட வேளையில் , அதனை மறுத்து டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி விசாரணைக் கோரியுள்ளார்.  உள்துறை அமைச்சராக பதவி வகித்தப்போது,  அல்ட்ரா கிரானா என்ற நிறுவனம் , வி.எல்.என் திட்டத்தையும், சீனாவில் தனது ஓரிட சேவை மையத்தை தொடர்ந்து நடத்துவதற்கு சாஹிட் ஹமிடி அனுமதி வழங்கியுள்ளார். பொதுச் சேவைத்துறையில் ஓர் அதிகாரியாக இருந்தும் சாஹிட் ஹமிடி தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் மார்ச் 28 ஆம் தேதியில் இருந்து 2018 ஆம் ஆண்டில் மார்ச் 2 ஆம் தேதிக்கு உட்பட்ட காலக் கட்டத்தில் புத்ராஜெயாவில் உள்ள பிரிசின்ட் 16, ஶ்ரீ சத்ரியா இல்லத்தில் சாஹிட் ஹமிடி அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2009 மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் பிரிவு 16, உட்பிரிவு ஏ , உட்பிரிவு பி-யின் கீழ் சாஹிட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் பிரிவு 24, உட்பிரிவு 1-ன் கீழ் சாஹிட் ஹமிடிக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை, மற்றும் லஞ்சமாக பெற்றத் தொகையை ஐந்து மடங்கு அபராதமாக செலுத்த அச்சட்டம் வகை செய்கிறது.

2 லட்சம் ரிங்கி ஜாமின் தொகையில் ஒரு நபரின் உத்தரவாத்தின் பேரில் அஹ்மாட் சாஹிட் ஹமிடியை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேவேளையில் வரும் ஜூலை 31 ஆம் தேதி அவ்வழக்கு மறு விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன