பினாங்கு, ஜூன் 26-

பினாங்கு மாநிலத்தில் கட்டுவதற்கு அனுமதி தரப்படாத ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்த காரணத்தால், 4 பேர் பலியாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக,, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி இராமன் கவலை தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் தஞ்சோங் பூங்கா பகுதியில் அனுமதி பெறப்படாமலேயே கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 4 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பது அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணமென்று அவர் ஊடகங்களுக்கான செய்தி ஒன்றில் விவரித்துள்ளார்.

பினாங்கு மாநகராண்மைக் கழகம்,இந்த கட்டுமானப் பணி தங்களின் அனுமதியின்றி நடைபெற்றிருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், அரசாங்கத்தின் அனுமதியின்றி இக்கட்டடம் எழுப்பப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக மீனாட்சி வினவியுள்ளார்.

இந்தக் கட்டுமானப் பணி பெரும்பாலும் அந்தி சாயும் வேளைகளில் நடைபெற்றிருப்பதால் இது குறித்து அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியாமலேயே இருந்து வந்துள்ளது என்றும், தற்போது விபத்து நடந்ததாலேயே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகவும் மீனாட்சி சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21ஆம் நாள் இது போன்ற விபத்து இதே பகுதியில் நிகழ்ந்திருந்தும், சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு ஒரு படிப்பினை தராமலிருப்பது வேதனையை அளிப்பதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மாநில அரசாங்கமும் மாநகராண்மைக் கழகமும் விரைந்து விசாரணை நடத்த வேண்டுமென்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கேட்டுக் கொள்வதாகவும் இது பணியிட விபத்து என்று அலட்சியம் காட்டக் கூடாது எனவும் மீனாட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டிருக்கும் அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், நிலச்சரிவுகள் அதிகமாக நிகழ்கின்ற, பத்து பிரிங்கி, தஞ்சோங் பூங்கா, தெல்லோக் பாஹாங் மற்றும் பாயா தெருபோங் போன்ற பகுதிகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கண்ணோட்டம் என்றென்றும் மிகுந்திருக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை எழுப்பியிருக்கிறார்.

மாநகராண்மைக் கழகத்தினர் புகாருக்கும் அசம்பாவிதத்திற்கும் காத்திருக்காமல் பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்ற கோணத்திலேயே தங்களின் கண்டிப்புப் பணியை கட்டாயமாக மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.