அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கடப்பிதழ் புகைப்படத்தில் பொட்டு விவகாரம்: அதிகாரி தவறு இழைத்து விட்டார்! -டத்தோ க.முனியாண்டி தகவல்
சமூகம்முதன்மைச் செய்திகள்

கடப்பிதழ் புகைப்படத்தில் பொட்டு விவகாரம்: அதிகாரி தவறு இழைத்து விட்டார்! -டத்தோ க.முனியாண்டி தகவல்

ரவுப், ஜூன் 27-

அனைத்துலகக் கடப்பிதழ் விண்ணப்பத்திற்காகப் புகைப்படம் எடுக்கின்ற இந்தியப் பெண்கள், நெற்றியில் பொட்டு இட்டும், காதணிகள் அணிந்தும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்கிற விசித்திர அதிகாரமானது, மலேசிய குடிநுழைவுத் துறையின் நிலையான இயக்க முறைமை (எஸ்.ஓ.பி.) இல்லை என்பதை ரவுப் குடிநுழைவுத் துறை அலுவலகத் தலைவர் இன்று ஒப்புக் கொண்டார்.

கடந்த வாரம், இந்திய மாதுவை வலுக்கட்டாயமாக தன் நெற்றிப் பொட்டை அழிக்கச் சொல்லி, கடப்பிதழுக்கான புகைப்படம் எடுக்கப்பட்ட சம்பவத்திற்கும் அவர் தமது துறைச் சார்பாக இந்திய சமுதாயத்திடம் மன்னிப்புக் கோரினார்.

“சம்பவத்தன்று எங்கள் அதிகாரிதான் தவறு இழைத்து விட்டார். இந்தியப் பெண்கள், தங்கள் நெற்றிப் பொட்டை அகற்றிவிட்டுதான் கடப்பிதழுக்கானப் புகைப்படம் எடுக்க முடியும் என்கிற சட்டம் இல்லை. தவறுக்காக மன்னித்து விடுங்கள்!” என்று அந்தத் தலைவர் தங்களிடம் மனம் விட்டுப் பேசியதாக, மஇகா ரவுப் தொகுதித் தலைவரும் மஇகா பகாங் மாநிலத் துணைத் தலைவருமான டத்தோ க.முனியாண்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரவுப் குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில், ரவுப் அந்து ஆலய சபா தலைவரும் ரவுப் இந்து சங்கத் தலைவருமான டத்தோ க.தமிழ்ச்செல்வன், ரவுப் இந்து ஆலய சபா தலைவரும் ரவுப் இந்து சங்கத் துணைத் தலைவருமான ஐ.சண்முகநாதன், ரவுப் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரும் மஇகா பகாங் மாநில இளைஞர் பிரிவுத் துணைத் தலைவருமான தர்மராஜா என்ற சீடி ராஜாவும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இந்தப் பொட்டு விவகாரம் இதன் வழி ஒரு தீர்வுக்கு வந்துள்ளதாகவும், இந்தியப் பெண்கள் வழக்கம் போல தாரளமாக பொட்டு இட்டும், காதணிகள் அணிந்தும் அனைத்துலகக் கடப்பிதழுக்கு புகைப்படம் எடுக்கலாம் என்று டத்தோ க.தமிழ்சசெல்வன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன