ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > ஆசியான் நாடுகளுக்கு இடையே வலுவான நட்புறவு தேவை! -டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன்
உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆசியான் நாடுகளுக்கு இடையே வலுவான நட்புறவு தேவை! -டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன்

பேங்காக், ஜான் 28-

ஆசியானை ஒன்றிணைப்பதற்கு மலேசியாவும் தாய்லாந்தும் முக்கியமான தொடர்பு பாலத்தை நிர்மாணிக்க வேண்டும் என கியூஐ குழுமத்தின் நிர்வாக தலைவர் டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார். இவ்வட்டாரம் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண்பதற்கு இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை அங்கீகரிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாம் இன்னும் வலுவான நெருக்கத்தை எட்டவில்லை. ஆசியானில் இணைந்து பணியாற்றுவதற்கு பிரிவினைகளுக்கு முடிவு கட்டி இணைப்பு பாலங்களை நிர்மாணிக்க வேண்டும்.

பல ஆண்டுகாலம் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரிய நடைமுறைகளால் நெருக்கத்தை விட முரண்பாடுகள் தான் அதிகமாக உள்ளன. ஆசியான் நாடுகள் ஒன்று சேர்ந்து உலகின் முக்கிய பொருளாதார வட்டாரமாக வருவதற்கான விவேகமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென விஜய் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

பேங்காக்கில் நடைபெற்ற ஆசியான் சமூக தலைமைத்துவ பங்களித்துவ 2019 ஆம் ஆண்டுக்கான ஆய்வரங்கின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். ஆசியான் நாடுகள் 5 வெவ்வேறு மேற்கத்திய வல்லரசுகளின் காலனித்துவத்தில் இருந்த பின்னர் அவை மேம்பாட்டை அடைந்துள்ளதாக விஜய் ஈஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இந்தோனேசியாவில் உள்ள மாணவர்கள் ஹாலாந்திற்கும், லாவோஸ், வியட்நாம்,கம்போடியா வைச் சேர்ந்த மாணவர்கள் பிரான்சிற்கும் கல்வி பயில செல்வதும் வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல.

மலேசியாவில் உள்ள எங்களது மாணவர்களும் சிங்கப்பூர், புருணை மற்றும் மியன்மார் மாணவர்களும் அமெரிக்காவில் மேற்கல்வியைத் தொடர விரும்புகின்றனர்.அதேபோன்று பிலிப்பைன்சை சேர்ந்த மாணவர்களும் அமெரிக்காவுக்கு உயர்கல்வி பயிலச் செல்கின்றனர்.

காலனித்துவத்திற்கு முன் ஆசியானில் மக்கள் ஒன்றாக சேர்ந்து வேலை செய்துள்ளதோடு ஒன்றாகவும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என  டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன் தெரிவித்தார். காலனித்துவ ஆட்சி நம்மை பிரித்து விட்டது .இந்த நாடுகளால் மேம்படுத்தப்பட்ட சட்டங்களை நாம் கொண்டுள்ளோம்.

கடந்தகால வேறுபாடுகளை நாம் மறந்துவிட்டு ஆசியானை மேம்படுத்துவதற்கு ஒன்றாக இணைந்து பணியாற்றுவது அவசியமாகும். ஒரு பொதுவான வட்டாரமாக ஆசியானின் 10 நாடுகளும் தங்களுக்குள் உலகில் பத்து முன்னணி பொருளாதார நாடுகளாக திகழ வேண்டும்.இதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது.

பொருளாதார ரீதியில் உலகளாவிய மாற்றங்களையும் சவால்களையும் கொண்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஆசியான் அங்கீகரிக்க வேண்டும் என விஜய் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார். .உலகில் முக்கிய பொருளாதார மையமாகவும் ஆசியான் திகழ்கிறது. இந்த இரண்டு நாள் ஆய்வரங்கில் அரசாங்கம், வர்த்தகம் ,கல்வித்துறை ,சிந்தனை குழாம் ஆகியவற்றை சேர்ந்த தலைவர்கள் எதிர்காலத்தில் ஆசியான் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் விரிவாக விவாதித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன