கோலாலம்பூர் ஜூன் 28-

விஜய் தொலைக்காட்சியில் ஒளியேற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது. கடந்த இரண்டு பிக் பாஸ் நிகழ்ச்சிகளை அதிகமாக பார்த்த ரசிகர்களின் பட்டியலில் மலேசியாவிற்கு முதலிடம்.

இந்நிகழ்ச்சிக்கு மலேசியர்கள் வெகுவாக ஆதரவு வழங்கி வருகிறார்கள் என்பதை அறிந்து இம்முறை மலேசிய கலைஞருக்கு வாய்ப்பு வழங்க விஜய் டிவி முன் வந்தது. பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்பட்ட பிறகு இறுதியாக முகேன் ராவ் கலந்து கொண்டார். மலேசியாவில் உள்ள கலைத்துறை ரசிகர்கள் அவருக்கு வலுவான ஆதரவை வழங்கி வரும் நிலையில் இது தேவையான ஒன்றா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் மலேசிய கலைஞர் கலந்து கொண்டு இருக்கிறார் என்ற பார்வையில் இதை அணுகினால் எந்தத் தவறும் இல்லை என்கிறார் கலைஞர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரான மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார்.

நம்மை நாமே பிரித்து பார்க்க கூடாது. முகேன் ராவ் தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை மலேசிய இந்தியர் என்ற பார்வையில் நாம் பார்க்க வேண்டும். நாமே தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரிந்து இருந்தால் நமது ஒற்றுமையை எப்படி வெளி நாட்டிற்கு எடுத்து வைப்போம் என அவர் கேள்வி எழுப்பினார்.

முகேன் ராவ் தெலுங்கராக இருந்தபோதும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு காரணம் தமிழ் கலைஞர் என்பதால் தான். தமிழை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்த நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றார். அதுவும் தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை நாம் உணர வேண்டும்.

இன்றுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. அதில் இருக்கும் நல்ல விஷயத்தை எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக மலேசிய கலைஞரான முகேன் ராவ்வை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை அவரை திட்டாமல் இருங்கள். அவரது பயணம் தொடர நாம் அனைவரும் வாழ்த்துவோம் என ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார்.