விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் சிந்துபாத். சேதுபதி என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் திரைப்படம் என்பதால் இதற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. இத்திரைப்படத்தை மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரிம் காப்பிரேஷன் வெளியிட்டுள்ளது.

ஆனால் இப்படம் விஜய் சேதுபதியின் வரலாற்றில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை. விஜய் சேதுபதி அவருடைய மகன், அஞ்சலி இவர்களைச் சுற்றி நகரும் கதை என்றாலும் அதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்பதுதான் இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பின்னடைவு.

மலேசியாவில் வேலை செய்யும் அஞ்சலி தாயகம் திரும்புகின்றார். உரக்கப் பேசும் அஞ்சலி காதுகேட்காத விஜய் சேதுபதிக்கு காதல் மலர்கின்றது. இதை அவர்கள் வீட்டில் எதிர்க்கிறார்கள். மீண்டும் மலேசியா திரும்ப வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும்போது அஞ்சலிக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொள்கிறார் விஜய் சேதுபதி.

இரண்டு நாட்களில் வந்து விடுவேன் என்று சொல்லி மலேசியா வரும் அஞ்சலிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகின்றது. அவர் தாய்லாந்துக்கு கடத்தப்படுவதாக தகவல் அறிந்த விஜய் சேதுபதி தாய்லாந்து சென்று அவரை மீட்டாரா இல்லையா என்பது தான் மீதி கதை.

பிரம்மாண்டமான கதை என்றாலும் திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லை. சில காட்சிகளை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வில்லனுக்கு அதிகப்படியான பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால் இத்திரைப்படத்தில் பெரிதாக அவர் எதையும் செய்துவிடவில்லை. பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை இத்திரைப்படம் தாங்கி பிடிப்பது தான் பலம். ஆனால் அதை சொல்லிய விதத்தில் இயக்குனர் தோல்வி அடைந்து விட்டார்.

பெண்களின் சருமம் விற்பனைக்காக எப்படி திருடப்படுகிறது என்ற மிகப்பெரிய கதையை பத்து நிமிடத்திற்கு உள்ளடக்கி சுவாரசியத்தை குறைத்துவிட்டார்கள். ஒரே மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் மலேசிய நடிகர்களுக்கும் நன்கு நடிக்கத் தெரியும் என்பதை கணேசன் உறுதிப்படுத்தி இருக்கிறார். பின்னணி இசை பாடல்கள் என யுவன் சங்கர் ராஜா தான் நமக்கு ஒரே ஆறுதல்.

மொத்தத்தில் சிந்துபாத் ரசிகர்களை சிதற விட்ட பாத்.