அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > தேசிய திடல் தட குழுவுக்கு மீண்டும் திரும்ப ஆசை – ஹரூண் ரஷிட் !
விளையாட்டு

தேசிய திடல் தட குழுவுக்கு மீண்டும் திரும்ப ஆசை – ஹரூண் ரஷிட் !

கோலாலம்பூர், ஜூலை.2 – 

தேசிய திடல் தட குழுவின் பயிற்றுனராக பொறுப்பேற்க தாம் ஆவல் கொண்டுள்ளதாக ஹரூண் ரஷீட் தெரிவித்துள்ளார். எனினும் 2011 ஆம் ஆண்டில் செப்டம்பர் 12 ஆம் தேதி,  அனைத்துலக விளையாட்டு நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பால், 10 ஆண்டுகள் தடையை எதிர்நோக்கியுள்ள தமக்கு மலேசிய ஓட்டப்பந்தய சங்கம் உதவ வேண்டும் என ஹரூண் ரஷீட் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் புதிய தலைவர் டத்தோ எஸ்.எம் முத்து, ஹரூண் ரஷீட் மீண்டும் பயிற்றுனர் பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என நேற்று அறிவித்திருந்தார். அதிகமான உள்ளூர் பயிற்றுனர்களுக்கு ஆதரவளிக்க, மலேசிய ஓட்டப்பந்தய சங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். குறிப்பாக, 2019 சீ விளையாட்டுப் போட்டிக்கான ஓட்டப்பந்தய அணிக்கு ஹரூண் ரஷீட் பொறுப்பேற்பார் என முத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , அனைத்துலக விளையாட்டு நடுவர் மன்றம் வழங்கிய தண்டனைத் தொடர்பில்  மேல் முறையீடு செய்ய தாம் எண்ணம் கொண்டுள்ளதாக ஹரூண் ரஷீட் தெரிவித்தார். இதன் தொடர்பில் தாம் அனைத்துலக ஓட்டப்பந்தய சம்மேளனத்துக்கு கடிதம் எழுதவிருப்பதாகவும், அதற்கு மலேசிய ஓட்டப்பந்தய சங்கம் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2011 ஆம் ஆண்டில்  ஆறு தேசிய ஓட்டக்காரர்கள் ஊக்க மருந்து சோதனையில் கலந்து கொள்ள தவறியதை அடுத்து, அதில் உடந்தையாக இருந்ததாக கூறி ஹரூண் ரஷிட்டும், டத்தோ கரிம் இப்ராஹிம்மும்,  அனைத்துலக ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் நடவடிக்கையை எதிர்நோக்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன