மலிவு விலை சாராயத்தை நிறுத்துவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன? – கார்த்தி கேள்வி

குவாந்தான், ஜூலை 2-

மலிவு விலை சாராயத்தை நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையை நாட்டில் உள்ள சமூக இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கம் இது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பகாங் மாநில மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பகுதி தலைவர் கார்த்திக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மலிவு விலை சாராயத்தை உட்கொண்ட ஓர் இந்திய மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது. அந்த மலிவு விலை சாராயத்தை குளிர்பானந்துடன் கலந்து கொடுத்த பிறகு தான் இரண்டு முறை பருகியதாக அந்த மாணவன் கூறியுள்ளான்.

பின்னர் தமக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை என்றும் தாம் வெளியிட்டுள்ள காணொளியில் அம்மாணவன் குறிப்பிட்டுள்ளான். இப்படி மாணவர்களை சீரழிக்கும் இந்த மலிவு விலை சாராயத்தையும், சட்டத்திற்குப் புறம்பாக விற்கப்படும் மதுபானங்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்திக் கேட்டுக் கொண்டார்.

மலிவு விலை சாராயத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட இந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என கார்த்திக் குறிப்பிட்டார்.

18 வயதிற்கு உட்பட்டவர்கள் மது அருந்தக் கூடாது என சட்டம் இருக்கும் இக்காலகட்டத்தில் மலிவு விலை சாராயம் விற்கக் கூடாது என்பதும் சட்டம்தான். அப்படி மலிவு விலை சாராயங்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

உடனடியாக இதற்கு ஒரு தனிப் பிரிவை அமைத்து மலிவு விலையில் சாராயங்கள் விற்கப்படுவதை நிறுத்த வேண்டும் என அவர் அறிக்கை விடுத்துள்ளார். இம்மாதிரியான விவகாரங்களை சமூக தளங்களில் வைரலாக்குவதை விட்டுவிட்டு பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையையும் அவர் வழங்கினார்.