ஜொகூர், ஜூன் 2-

ஜொகூர் பக்காத்தான் அரசாங்கம் இந்திய சமூக வளர்ச்சிக்கு எந்தவித திட்டத்தையும் முன்வைக்கவில்லை; அவர்கள் மீது பாரா முகமாக உள்ளதென்று மஇகா சட்டமன்ற உறுப்பினர் இரா. வித்தியானந்தன் குற்றஞ்சாட்டினார்.

தற்போது; யார்தான் இந்திய சமூகத்தின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கவனம் செலுத்தாவிட்டால் தேசியமுன்னணி சார்பிலுள்ள நாங்கள் கவனம் செலுத்த முன் வருவோம். என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் மந்திரி பெசார் வந்து பார்த்தும் இதுவரை மாநில அரசாங்கம் இந்திய சமூகத்தின் ஈமக்கிரிகை இடத்திற்கு தீர்வு காணாமல் மெத்தனப் போக்கைக் கொண்டுள்ளது என்று விந்தியானந்தன் குற்றஞ்சாட்டினார். மேலும் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப் படாமல் உள்ள ஸ்ரீ ஆலாம் தமிழ்ப்பள்ளிக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும். மாநில அரசாங்கத்தின் வாயிலாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண யாராவது முன் வருவார்களா? அல்லது பார்வையாளர்களாக மட்டும் வந்து,பார்த்துக் கொண்டுப்போவார்களா?

அதேவேளை, மாணவர்கள் குறைவாக உள்ள செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியை செனாய், விமான நிலைய நகரில் இடம் இருந்தும் அதனை அங்கு மாற்றுவதற்கான எந்த முயற்சியும் அரசாங்க நிர்வாகம் எடுக்க எது தடைக்கல்லாக உள்ளது?

இதற்கு தீர்வு காண மாநில அரசாங்கத்தில் உள்ள எவரும் குரல் எழுப்ப முன்வரவில்லை. ஒரு சமயம் அந்த இடம் சரியான இடமாக அமையாவிட்டால் அதற்கு மாற்றலாக இன்னொரு புதிய இடத்தை அடையாளம் கண்டு அதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.

மேலும் ஜொகூரில் தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்கான அதிகாரிகள் நியமனம் உட்பட, இன்னும் இந்திய சமூகத்திற்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாக்குவதற்கும் குரல் எழுப்புவதற்கும் பக்காத்தான் அரசாங்கம் மெத்தனப்போக்
கை கடைப்பிடித்து வருகிறது.என்று குற்றஞ்சாட்டிய சட்டமன்ற உறுப்பினரான வித்தியானந்தன் தொடர்ந்து; பொதுத் தேர்தலுக்கு முன்பதாக அடையாளம் காணப்பட்ட இந்து ஆலயங்களுக்கான நிலப்பிரசனைகளை மாநில அரசாங்கம் ஓராண்டாகியும் கவனத்தில் கொண்டு அதற்குரிய நிலப் பட்டாக்களை வழங்க முன்வரவில்லை.

இதற்கு உடனடியாகத் தீர்வுகாணப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். பக்காத்தான் பொதுத் தேர்தலில் இந்திய சமுதாயத்திற்கு பல்வேறு நம்பிக்கையான வாக்குறுதிகளை வாரி வழங்கியது ;ஆனால் இன்று அதனை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டி வருவதேன் என்று ம.இ.கா. சட்டமன்ற உறுப்பினரான இரா.வித்தியானந்தன் கேள்வி எழுப்பினார்.