செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > திறமையான இளம் ஓட்டப்பந்தய வீரர்கள் அடையாளம் காணப்படுவர்! – டத்தோ எஸ்.எம். முத்து
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

திறமையான இளம் ஓட்டப்பந்தய வீரர்கள் அடையாளம் காணப்படுவர்! – டத்தோ எஸ்.எம். முத்து

கோலாலம்பூர் ஜூலை 2-

திறமையான ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் ஓட்டப்பந்தய போட்டிக்காக தயார்படுத்தப் படுவார்கள் என மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் புதிய தலைவரான டத்தோ எஸ்.எம் முத்து தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் ஓட்டப்பந்தயத் துறையில் ஆர்வமுள்ள பலர் ஆங்காங்கே இருக்கின்றனர். அவர்களை மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனம் அடையாளம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கவேண்டிய அவசியம் இருப்பதாக எஸ் .எம் முத்து கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தேர்தல் ஆண்டு கூட்டத்தில் டத்தோ கரிம் இப்ராஹிமை தோற்கடித்து மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் புதிய தலைவராக ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தலைவராக இந்தியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன் அவர் மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.  முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனையான மும்தாஜ் ஜபார் மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளம் ஓட்டப்பந்தய வீரர்களை நாம் அடையாளம் காண வேண்டியுள்ளது. அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி உள்ளூரில் நடைபெறும் போட்டிகளிலும் அதிகமாக பங்கேற்கச் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் தங்களது திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே ஓட்டப்பந்தயத் துறையில் நல்ல ஆர்வம் இருக்கிறது. பள்ளி காலத்தில் அவர்கள் மாவட்ட ,மாநில மற்றும் தேசிய நிலைகளில் பள்ளிகள் விளையாட்டு மன்ற ஓட்டப்பந்தய போட்டிகளில் அதிகமாக கலந்து கொண்டு வெற்றியை பதிவு செய்கின்றனர்.

ஆனால் பள்ளி வாழ்க்கை முடிந்த பின்னர் ஓட்டப்பந்தய துறையிலிருந்து அவர்கள் விலகிவிடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவர்கள் தங்களிடம் உள்ள ஓட்டப்பந்தய திறனை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாவட்ட மற்றும் மாநில ரீதியில் நடைபெறும் பொது ஓட்டப்பந்தய போட்டிகளில் அவர்கள் அதிகம் கலந்து கொண்டு வெற்றிகளை பதித்தால் மலேசிய குழுவில் இடம்பெறும் சாத்தியத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும் .

இதனிடையே மலேசிய ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பயிற்சி வழங்குவதற்காக சிறந்த பயிற்சியாளர்களையும் மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனம் ஏற்பாடு செய்யும் என்றும் டத்தோ எஸ்.எம் முத்து கூறினார். தேசிய விளையாட்டு மன்றத்துடன் இணைந்து இதற்கான செயல்முறை திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னர்.

தொலைதூரப் பகுதிகளில் இருக்கின்ற இளம் ஓட்டப்பந்தய வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்குவது குறித்தும் ஆராய்ந்து வருவதாக முத்து தெரிவித்தார். மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் இதர அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் தேசிய விளையாட்டு மன்றத்தின் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தொலைதூரம், ஒதுக்குப்புறமான மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள ஓட்டப்பந்தய வீரர்கள், வீராங்கனைகளின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் டத்தோ எஸ்.எம் முத்து கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன