அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > நிலக் குடியேற்றத் திட்டங்களை இந்தியர்களுக்காக தொடங்குவீர்! – கணபதிராவ் கோரிக்கை
மற்றவை

நிலக் குடியேற்றத் திட்டங்களை இந்தியர்களுக்காக தொடங்குவீர்! – கணபதிராவ் கோரிக்கை

கோலாலம்பூர் ஜூலை 4-

டெல்டா மற்றும் பெல்க்ரா போன்ற நில குடியேற்றத் திட்டங்களை இந்தியர்களுக்காக தொடங்க வேண்டுமென அரசாங்கத்தை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் கேட்டுக்கொண்டார். நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்திய சமூகத்திற்கு இத்தகைய நிலக் குடியேற்ற திட்டங்களை அரசாங்கம் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பல ஆண்டு காலமாக இந்திய சமூகத்தினர் மேம்பாட்டு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே 14வது பொதுத் தேர்தலின்போது நம்பிக்கை கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி வழங்கியது போல் பெல்டா , பெல்க்ரா போன்ற நிலத் திட்டங்களை இந்திய சமூகத்திற்காக உருவாக்க வேண்டும் என கணபதி ராவ் கோரிக்கை விடுத்தார்.

இந்திய சமூகத்தினர் தோட்ட தொழில் துறையில் வேலை செய்வதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். எனவே அவர்களுக்கு வாய்ப்பும் சிறந்த வசதியும் வழங்கினால் வருமானத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு கடுமையாக உழைப்பதற்கு தயாராக இருப்பார்கள் என வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கணபதி ராவ் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு நில மேம்பாட்டு திட்டங்களில் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கினால் அவர்கள் அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் உள்நாட்டு இந்தியர்கள் குடியேற்றத் திட்டங்களில் பங்கேற்பதை மேலும் ஊக்குவிக்க முடியும் என அவர் கூறினார்.

கடந்த காலங்களில் இது போன்ற நிலத் திட்டங்களில் இந்திய சமூகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களும் தங்களது வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் முனைப்பு காட்டியதை அவர் சுட்டிக்காட்டினார். 1980ஆம் ஆண்டுகளுக்கு முன் ரப்பர், செம்பனை போன்ற மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாக மலேசியா திகழ்ந்தது.

பொருளாதாரத்திற்கு இந்த மூலப்பொருட்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருவதை நாம் மறுக்க முடியாது .கடந்த பல ஆண்டுகளாக தோட்டத் தொழில் துறையில் மேம்பாட்டிற்காக உழைத்த இந்திய சமூகத்தினரின் அர்ப்பணிப்பு மறக்கப்பட்டுவிட்டது வேதனையை ஏற்படுத்துவதாக கணபதி ராவ் கூறினார்.

நில குடியேற்றத் திட்டங்களில் இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களது பங்கேற்புக்கு அங்கீகாரம் வழங்கப்படாதது வேதனையை ஏற்படுத்துவதாக கணபதிராவ் தெரிவித்தார். கடந்த காலங்களில் பெல்டா மற்றும் பெல்க்ரா திட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு 5 அல்லது 6 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதால் அதனை அவர்களது குடும்பத்தினர் மேம்படுத்தி மேம்பாடு அடைந்தனர்.

செம்பனை நல்ல விலையில் விற்கப்படுகிறது. இதன் வழி நில குடியேற்றத் திட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகமான உற்பத்தியின் மூலம் தங்களது வருமானத்தை உயர்த்திக் கொண்டு வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு மாறிச் செல்லும்போது அவர்களுக்கு பதிலாக இந்தோனேசியா, வங்காள தேசம் ,நேப்பாளம் மற்றும் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

துரித மேம்பாட்டில் இந்திய சமூகத்திற்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படாததால் அவர்கள் ஏழ்மை நிலையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். எனவே வங்காளதேசம் ,நேப்பாள் மற்றும் ஆப்பிரிக்க ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழிலாளர்களை இங்கு கொண்டு வருவதற்கு பதிலாக நீண்ட கால அடிப்படையில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நில குடியேற்ற திட்டங்களில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என கணபதிராவ் கேட்டுக்கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய சமூகத்திற்காக நில குடியேற்றத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன