அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் அனைத்து கட்சிகளும்  பெர்சத்துவில் இணைவீர்-துன் டாக்டர் மகாதீர் அழைப்பு
அரசியல்முதன்மைச் செய்திகள்

மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் அனைத்து கட்சிகளும்  பெர்சத்துவில் இணைவீர்-துன் டாக்டர் மகாதீர் அழைப்பு

ஜோகூர் பாரு, ஜூலை 6-

அம்னோ உட்பட  மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் அனைத்து கட்சிகளும் பெர்சத்து எனப்படும் பார்ட்டி  பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியில் இணைய வேண்டுமென பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக்கொண்டார்.

மலாய்காரர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியாக இது அமைவதாக அவர் தெரிவித்தார். மலாய்காரர்களை பிரதிநிதிக்கும்  அதிகமான கட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மலாய் சமூகத்தை பிரதிநிதிக்கும் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் குறைந்து விடுவதாக டாக்டர் மகாதீர் கூறினார்.

பெர்சத்துவில் வந்து இணையுங்கள்.நமது குழு பெரிதாக இருந்தால் நாம் வலுவாக இருப்போம். மேலும் மற்றவர்கள்  பெர்சத்து கட்சியில் இணைவதை தடுக்காதீர்கள் என்றும் டாக்டர் மகாதீர் வலியுறுத்தினர்.

நாம் பிரிந்து இருந்தால் பலவீனமாகி விடுவோம். ஒற்றுமையாக இருந்தால் பலமாக இருக்க முடியும். பிரிந்து இருந்தால் எளிதாக விழுந்து விடுவோம் என ஜோகூர் ஜெயாவில் நடைபெற்ற நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

மலாய் சமூகத்தை வலுப்படுத்த நடப்பில் உள்ள அனைத்து மலாய்க் கட்சிகளுக்கு அழைப்பு  விடுப்பீர்களா  என கேட்கப்பட்டபோது பிரதமர் இத்தகவலை வெளியிட்டார். இந்த முயற்சிக்கு நம்பிக்கை கூட்டணியின் இதர உறுப்புக் கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு வருமா என்று  வினவப்பட்டபோது, இது அவர்களது பிரச்சனையாகும்.

இதர கட்சிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை. அவர்கள் நம்பிக்கை கூட்டணியில் இருந்தாலும் அவர்களும் புதிய உறுப்பினர்களை தேடி வருகின்றனர் என டாக்டர் மகாதீர் மறுமொழி தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மலாய்க்காரர்களை  ஒரு கட்சி மட்டுமே பிரதிநிதித்தது.ஆனால் பதவி ஆசையினால் மலாய்க்காரர்கள் இப்போது ஆறு கட்சிகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். விரைவில் இந்த எண்ணிக்கை 10 கட்சியாக கூட அதிகரிக்கலாம் .அதுவே பின்னர் நூறு கட்சிகளாகவும் விரிவடைய லாம் .பெரும்பான்மையான 60 விழுக்காடு ஆதரவை அவர்கள் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு கட்சியும் 10 விழுக்காடு ஆதரவை மட்டுமே கொண்டுள்ளது. ஒரு கட்சியில் 30 பேர் மட்டுமே உறுப்பினராக உள்ளனர். அப்படி இருந்தால் எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் அவர் வினவினார்.

மலாய்காரர்கள் பிரிந்து கிடப்பதால் முன்பு போல் இப்போது வலுவாக இல்லை. எல்லா கட்சிகளின் உறுப்பினர்களும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட தலைவருக்கு விசுவாசமாக இருக்க கூடாது என்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன