அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 30% பட்டதாரிகளுக்கும் 70% தொழில்துறையினருக்கும் வேலை வாய்ப்பு -அமைச்சர் வேதமூர்த்தி
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

30% பட்டதாரிகளுக்கும் 70% தொழில்துறையினருக்கும் வேலை வாய்ப்பு -அமைச்சர் வேதமூர்த்தி

கோலாலம்பூர், ஜூலை 6-

நான்காவது தொழிற்புரட்சியில் நாடு முனைப்பு காட்டுகின்ற இவ்வேளையில் பட்டதாரி இளைஞர்களுக்கு ஏறக்குறைய 30 விழுக்காட்டு வேலைவாய்ப்பும் பல்துறைசார் நுட்பக் கல்வியையும் நிபுணத்துவ ஆற்றலையும் கொண்டவர்-களுக்கு சுமார் எழுபது விழுக்காட்டு வேலைவாய்ப்பும் கிடைக்கக் கூடிய சூழ்நிலை எதிர்காலத்தில் அமையக்கூடும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உடல் உழைப்புத் தொழில் சம்பந்தமான வேலைவாய்ப்பை அந்நியத் தொழிலாளர்கள் ஆக்கிரமித்துள்ள இன்றைய காலக் கட்டத்தில், இந்திய இளைஞர்களும் பட்டதாரி மாணவர்களும் அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றனர்.

பட்டப்படிப்புத் தகுதியை மட்டும் கொண்டுள்ள மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, குறிப்பாக நிருவாகம் தொடர்பான வேலைவாய்ப்பு அரசு சார்ந்த பொதுத் துறையிலும் தனியார் துறையிலும் குறிப்பிட்ட அளவே இருப்பதால், பெட்ரோலியத் துறை, வான் போக்குவரத்து, பொறியியல் மற்றும் மின்னியல் உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த நுட்பத் த்குதியைக் கொண்டிருந்தால் அவர்களுக்கான வேலைவாய்ப்பு பிரகாசமாக அமையும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய இளைஞர்கள் இளம் வயதிலேயே தொழில் முனைவர்களாக உருவாவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

இவற்றை யெல்லாம் கவனத்தில் கொண்டுதான் 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின்வழி, மலேசிய இந்திய சமுதாயம் பொருளாதார-வர்த்தக ரீதியில் எந்தெந்த அளவிற்கு மேம்பாடு காணமுடியும் என்பதற்கான வழிவகை பற்றி கடந்த ஆறு மாதங்களாக ஆலோசனை செய்து வரும் அதேவேளையில், இதன் தொடர்பில் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்பையும் கருத்தையும் கவனத்தில் கொள்ள விரும்புவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்பாக இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருவதாகவும் மேலும் இது குறித்து இந்திய சமுதாயத்தின் கல்விமான்கள், தொழில்வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட தரப்பினரின் ஆலோசனையை வரவேற்பதாகவும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான செனட்டர் பொன்.வேதமூர்த்தி அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன