அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கல்வி அமைச்சின் புதிய நியமனம் சந்தேகத்தை எழுப்புகிறது? – டத்தோ கமலநாதன்
அரசியல்முதன்மைச் செய்திகள்

கல்வி அமைச்சின் புதிய நியமனம் சந்தேகத்தை எழுப்புகிறது? – டத்தோ கமலநாதன்

கோலாலம்பூர் ஜூலை 8-

மலேசியக் கல்வி அமைச்சின் நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு அரசியல் சார்ந்த சில தலைவர்கள் முன்னணி பொறுப்பில் அமர்த்த பட்டிருப்பது பல சந்தேகத்தை எழுப்புவதாக கல்வி அமைச்சின் முன்னாள் துணை அமைச்சர் கமலநாதன் தெரிவித்தார்.

முன்னதாக முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ள இவர்களுக்கு எம்மாதிரியான தகுதி இருக்கின்றது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். கல்வி அமைச்சின் முக்கிய பொறுப்புகளில் சிவகுமார், சார்லஸ் சந்தியாகோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக மலேசிய இந்திய காங்கிரசின் தலைமையகத்தில் செய்தியாளர்களை டத்தோ கமலநாதன் சந்தித்தார். அமைச்சரவையில் 4 முழு அமைச்சர் ஒரு துணை அமைச்சர் இருந்தபோதும் கல்வி அமைச்சருக்கு இவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை இந்த நியமனம் உறுதிப்படுத்துவதாக கமலநாதன் கூறினார்.

கல்வி சார்ந்த பிரச்சினைகளை இவர்கள் கவனிப்பார்கள் என்றால் என்னுடைய சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் இவர்களுக்கு உண்டு என்றார் அவர். தாம் கல்வி அமைச்சின் துணை அமைச்சராக இருந்த காரணத்தினால் பல்வேறு விவகாரங்கள் குறித்து தாம் நேரடியாக அறிந்து வைத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2018 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷனில் எத்தனை இந்திய மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டது? அதை எத்தனை இந்திய மாணவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்? அதேபோல் இந்த ஆண்டு 2019, நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளை எத்தனை இந்திய மாணவர்களுக்கு வழங்கியது? அந்த வாய்ப்புகளை எத்தனை இந்திய மாணவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்ற தகவலை பொறுப்பேற்றுள்ள புதிய தலைவர்கள் உடனடியாக சமுதாயத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கமலநாதன் கேட்டுக்கொண்டார்.

மலாக்கா உட்பட சில பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக கடந்த அரசு வழங்கிய நிதி ஒதுக்கீட்டை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் நிறுத்தியிருக்கின்றது. அதனை செயலாக்கம் படுத்துவதற்கு இந்த புதிய தலைமையிலான குழு என்ன செய்யப் போகின்றது என்ற கேள்வியையும் கமலநாதன் முன்வைத்துள்ளார்.

கண்துடைப்பிற்காக இந்த நியமனம் இருக்கக்கூடாது. கல்வித்துறையில் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இந்த குழு அமைக்கப்பட்டால் அதை தாம் வரவேற்பதாக அவர் கூறினார். ஆனால் நான் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமக்கு கிடைத்த தகவலின்படி இந்த ஆண்டு மெட்ரிகுலேஷனில் வெறும் ஆயிரம் மாணவ இந்திய மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். அது உண்மையில்லை என புதிய குழு அறிவித்தால் தகவல்களை வழங்கினால் மன்னிப்புக் கேட்பதற்கும் தாம் தயாராக இருப்பதாக கமலநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன