தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற சிறப்பு குழு! டாக்டர் மகாதீர் தகவல்

கோலாலம்பூர் ஜூலை 9-

தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவது என்பதை ஆராய்வதற்கு நம்பிக்கை கூட்டணி சிறப்பு குழு ஒன்றை அமைக்கும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்தார்.

ஒரு ஆண்டு முழுமை அடைந்துவிட்டது .  சில வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றியுள்ளோம் . தேர்தல் வாக்குறுதிகளை எப்படி அமல்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளையும் நாம் கண்டறிந்துள்ளோம் என டாக்டர் மகாதீர் கூறினார்.

அதேவேளையில் நமது வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்தும் ஆராய்வதற்கு நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். புத்ராஜெயாவில் பிரதான தலைமைத்துவ அறநிறுவனத்தில் நம்பிக்கை கூட்டணியின் நிர்வாக மன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது டாக்டர் மகாதீர் இத்தகவலை வெளியிட்டார்.

மேலும் நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பிரதமர் பதில் வழங்கும் சிறப்பு நிகழ்வும் அமல்படுத்துவதற்கு தாம் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவர் சொன்னார் ஒவ்வொரு புதன்கிழமையும் கேள்விக்கு பதில் அளிப்பதற்காக நான் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.

நான் பதில் சொல்வதற்கு கேள்விகள் இல்லாத நிலையில் நாடாளுமன்றத்திற்கு செல்லாவிட்டால் அது எனது தவறு இல்லை என்றும் அவர் சொன்னார். இப்போது கூட நான் பதில் அளிப்பதற்கு கேள்விகள் இல்லாவிட்டாலும்கூட நான் நாடாளுமன்ற கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொள்கிறேன் என டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்ற கூட்டம் மீண்டும் தொடங்கும் போது பிரதமரிடம் கேள்வி கேட்கும் சிறப்பு நிகழ்வு தொடங்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் லியு வூய் கியோங் இம்மாதம் 4ஆம் தேதி கூறியிருந்தார். கேள்விக்கு பதில் அளிப்பதற்காக டாக்டர் மகாதீர் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு டாக்டர் மகாதீர் கேள்விக்கு பதில் தெரிவிப்பதற்காக  அடிக்கடி நாடாளுமன்றம் வந்துள்ளார் .எனவே பிரதமரிடம் கேள்வி கேட்கும் நேரம் நேரத்தை தொடங்குவதற்கான செயல்திட்டம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் லியு கூறினார். . எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமரிடம் கேள்வி கேட்கும் நிகழ்வு தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.