அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > உடலில் ஏற்படும் அரிப்பு ஒவ்வாமையை மூலதனமாகக் கொண்டிருக்கிறது! – டத்தோ சொக்கலிங்கம் விளக்கம்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

உடலில் ஏற்படும் அரிப்பு ஒவ்வாமையை மூலதனமாகக் கொண்டிருக்கிறது! – டத்தோ சொக்கலிங்கம் விளக்கம்!

பினாங்கு ஜூலை 9-

அரிப்பு என்பது உடல் இயந்திரத்தில் இயங்கும் அலாரம் போன்றது.உடலுக்குள் வேண்டாத பொருளின் ஊடுருவல் உணரப்பட்டால்,அதன் எச்சரிக்கை மணியாக அரிப்பின் அறிகுறி உணர்த்துகிறது.நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் அரிப்பு ஏற்படுத்தும் தொல்லையால் தோலைச் சொறியத் தூண்டுவது இதன் எதிர்வினை விளைவாகும்.

அரிப்பு உண்டாகும்போது சிலநேரம் இதமாகவும் இன்பமாகவும் இருந்தாலும், இதுவே பல மணி நேரம் நீடித்தால் தாங்க முடியாத வெறுப்பையும் வேதனையையும் ஏற்படுத்துவது அனுபவ ரீதியாக உணரப்பட்ட பெருந்தொல்லை என்று, பினாங்கு மாநிலத்தில் இலவசமாக செயல்பட்டு வரும் சிவசாந்தா தர்ம மருத்துவமனையின் தன்னார்வ மருத்துவரான தோல் நிபுணர் டத்தோ சொக்கலிங்கம் விவரித்தார்.

உடலியல் ரீதியாக உணர்த்தினால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு என்றும் தோலின் உயிரணுக்களால்
இது செயல்படுத்தப்படுவதாகவும் கூறிய அவர்,அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் பிடிக்காத பொருளுக்கு இரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றலின் தன்மை இது வகைப்படுவதாக விளக்கமளித்தார்.அரிப்பின் அளவு அதிகரிக்கும் வேளையில் அதன் விளைவுகளின் பாதிப்பு பற்பல அல்லல்களை ஏற்படுத்துவதாகவும் சொக்கலிங்கம் எடுத்துரைத்தார்.

மருத்துவர் டத்தோ சொக்கலிங்கம்.

இரத்தக் குழாய்களின் நரம்பு முனைகள் பாதிப்புறும்போது அரிப்பின் தன்மை மாறுபட்டு அதுவே கடும் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்ற உபாதைகள் உண்டாவதாகவும்,கட்டுக்கடங்காத அரிப்பு பொது இடங்களில் கூட சிலருக்கு சொறியத் தூண்டுவதும் சங்கடமானது என்றும் அவர் கூறினார்.

அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அணிகலன்கள், ஆடைகள் உஅடல் உபயோகப் பொருள்கள் ஆகியவை ஒவ்வாத தன்மையில் நமக்கு எதிராக இருந்தாலே, அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக சுட்டிக் காட்டிய சொக்கலிங்கம், குழந்தைகளுக்கான ஈர உறிஞ்சி உள்ளாடை ஒவ்வாத தன்மையிலும் பெண்களுக்கு சலவைக்கு பயன்படுத்தும் சோப்பு திரவங்களின் பாதிப்பாலும் தோல் அரிப்புகள் உண்டாவதாக தெரிவித்தார்.

இத்தகைய அரிப்புகளால் தோல் தடினமாவதுடன் சொர சொரப்பாக கறுத்துப் போவதற்கும் வாய்பிருப்பதாகக் கூறிய அவர், இதன் பாதிப்புகளால் சொறியும் தன்மை உண்டாகி நாளடைவில்,  நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீக்கமும் தடிப்பும் உருவாகி அதிலிருந்து நீர் வடியும் நிலையும் நிகழுமென்று குறிப்பிட்டார்.இது அரிப்பு நோயின் கடும் பாதிப்பான கரப்பான் தன்மைக்கு இட்டுச் சென்று விடுமென்றும் சொக்கலிங்கம் அறிவுறுத்தினார்.

சிலருக்கு வெயிலும் குளிரும் ஒத்துக் கொள்ளாமல் அரிப்பை உண்டாக்குமென்றும் சூரிய ஒளியின் அலர்ஜி ஒவ்வாத நிலையில் சிலர் இந்த பாதிப்புக்கு உள்ளாவதாகக் கூறிய அவர், இதே போன்று குளிர் காலத்தில் சிலருக்கு பனிக் காற்று பட்டு தோல் வறண்டு அரிப்பை ஏற்படுத்துமென்று தெரிவித்தார்.இவற்றுக்கு அப்பாற்பட்டு வீட்டுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளால் சிலருக்கு அரிப்பு ஏற்படுவது இயல்புதான் என்றாலும் நாய், பூனை ஆகியவற்றின் உரோமம் பட்டு இந்த தொந்தரவு சிலருக்கு பெரும் உபாதையை தருமென்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக அரிப்பு ஏற்படும்போது அதற்கான மூல காரணத்தை அறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை பெறுவதே உகந்த பயனைத் தருமென்றும் சிலர் தாங்களாகவே சுயமாக மருந்து உட்கொண்டு ஆபத்துக்கு அழைப்பு விடுத்துக் கொள்வதாகவும் சொக்கலிங்கம் கவலை தெரிவித்தார்.அரிப்பு நோய்க்கு நிவாரணம் பெறுவதற்கு தகுந்த சிகிச்சை முறையே முற்றிலுமான கடுப்பாட்டிற்கு இடமளிக்கும் என்றும் புலப்படுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன