அரசாங்கத்தின்  இரண்டாம் காலாண்டு அடைவு நிலை: கெராக்கான் அதிருப்தி

கோலாலம்பூர், ஜூலை 10-

இரண்டாம் காலாண்டுக்கான (2019 ஏப்ரல்-ஜூன்) பக்காத்தான் ஹராப்பான்  அரசாங்கத்தின் அடைவு நிலை அதிருப்தி அளிப்பதோடு  முதலாவது காலாண்டைக் காட்டிலும் மோசமாக இருப்பதாகவும் கெராக்கான் தேசிய  தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ்  ஹோ சாய் தெரிவித்தார்.

சுயேச்சை அரசியல் கட்சி எனும் முறையில் கெராக்கான் பக்காத்தான் ஹராப்பான்  அரசாங்கத்தின் முக்கிய கொள்கைகள் மற்றும் முடிவுகளைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதை டோமினிக் லாவ் சுட்டிக் காட்டினார்.

இதன் பொருட்டு ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தின் அடைவு நிலை அறிக்கையை இக்கட்சி  வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் இரண்டாவது காலாண்டில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் 185 முக்கிய கொள்கைகளில் 31 % (62) எதிர்மறையான கருத்துகளைப் பெற்றுள்ளன. அதே வேளையில், 29 % (51) ஆக்கப்பூர்வ கருத்துகளையும் எஞ்சிய 40% (72)  எதிர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வ கருத்துகள்  கலந்த நிலையிலும் பெறப்பட்டதாக அவர் விவரித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் அடைவு நிலை குறித்து அரசு   சார்பு அமைப்புகள், கொள்கை ஆய்வாளர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரை உட்படுத்தி மொத்தம் 1,211 பேரிடம் செடார் எனும்  அமைப்பு 2019ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில்  ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் வழி கண்டறியப்பட்ட நடப்பு அரசின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை  டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.  பொது கணக்குக் குழு தலைவரை நீக்கியது, டிவிஇடி  எனும் தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்வி பயிற்சி  திட்டங்களில் யூஇசி பட்டதாரிகளைச் சேர்த்துக் கொள்வது, இசிஎல்ஆர் திட்டத்தை மீண்டும்  தொடர்வது  மற்றும் வாக்காளர்  வயது வரம்பை 21லிருந்து 18ஆகக் குறைத்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கெராக்கான் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளாக  வகைப்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார்.

இதனிடையே, லினாஸ் திட்டத்தைத்  தொடர அனுமதித்தது, மெட்ரிகுலேஷன் திட்டத்தில் பூமிபுத்ரா கோட்டாவை 90 விழுக்காடாக நிலைநிறுத்தியது,  புதிதாக 11 ஏஇஎஸ் கேமிராக்களைப் பொருத்தியது, டோல் கட்டணத்திற்குப் பதிலாக போக்குவரத்து நெரிசல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது ஆகியன எதிர்மறையான நடவடிக்கைகளாக கருதப்பட்டன.

வாக்களிக்கும் வயதை 21 இல் இருந்து  18ஆகக் குறைத்த நடவடிக்கையை டாக்டர் டோமினிக் லாவ் பாராட்டினார்.  “ஒட்டு மொத்தத்தில்  அரசாங்கத்தின் செயல்பாட்டில் நேரிடையாகவோ அல்லது  மறைமுகமாகவோ அதிக எண்ணிக்கையிலான இளையோர் பங்கேற்பதை கெராக்கான் ஆதரிக்கிறது. அரசியல் கட்சிகளில்  சேர்வது என்பது அரசாங்கத்தில்  நேரடியாகப் பங்கேற்பதாகப் பொருள்படும். மறைமுக பங்கேற்பு என்பது அரசு சாரா இயக்கத்தில் சேர்ந்து அரசாங்கத்தைக்  கண்காணிப்பதாகப் பொருள்படும்” என்று அவர் விளக்கம் அளித்தார்.