அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழர் தேசியப் பேரறிஞர் குணாவின் ‘ஏரணம்’ நூல் கோலாகலமாக வெளியீடு கண்டது!
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழர் தேசியப் பேரறிஞர் குணாவின் ‘ஏரணம்’ நூல் கோலாகலமாக வெளியீடு கண்டது!

கிள்ளான், ஜூலை 10 –

தமிழர் தேசியப் பேரறிஞர் குணா எழுதிய ‘ஏரணம்’ நூல், தமிழர் தேசிய இயக்கமான தமிழர் களம் மலேசியா பேரியக்கத்தின் ஏற்பாட்டில், கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள மின்னியல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக வெளியீடு கண்டது.

இந்நிகழ்வுக்கு செந்தமிழ்ச் செல்வர் திரு.ஓம்சு.பா. தியாகராஜன் மற்றும் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் நலன் முனியாண்டி ஆகியோர் சிறப்பு வருகை தந்திருந்தனர். திருக்குறள் போற்றி இசைக்க, செந்தமிழ்ச் செல்வர் ஓம்சு தியாகராஜன் அவர்கள் திருவிளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

தமிழர் களம் மலேசியாவின் தலைமைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி வரவேற்புரை வழங்கினார். ரோஸ்லின் நடனப்பள்ளி மாணவிகள் கயல்விழி சைமன் சுந்தர், நிலாசினி மாரிமுத்து ஆகியோர் பரதம் வழங்க நிகழ்ச்சி விறு விறுப்புடன் தொடங்கியது.

தமிழர் களம் மலேசியாவின் தலைமைப் பொறுப்பாளர் எழிலன் தனது தலைமையுரையில், இனத்திற்காகவும் , மொழிக்காகவும் தங்களின் வாழ்க்கையையே ஈகம் செய்து உழைப்பவர்களுக்கு, அவர்கள் வாழுகின்ற காலத்திலேயே உரிய மரியாதையை வழங்கி அவர்களின் உழைப்பினை போற்ற வேண்டும்.

அதை விடுத்து அவர்கள் இல்லாத காலத்தில் விழா எடுத்து மாலை மரியாதை செய்யும் விளம்பர அரசியலை விட்டொழிக்க வேண்டும் என்றும், அறிஞர் குணாவின் நூல்களைப் படிக்காத யாரும் தமிழர் தேசியத்தில் முழுமையான தெளிவினைப் பெற்றுவிட முடியாது என்றதுடன் தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை தனது ஆய்வு நூல்களின் மூலம் நமக்கு தொடர்ந்து வழங்கிவரும் பேரறிஞர் குணாவின் நூல்கள் ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டியவை என்று கூறினார்.

‘ஏரணம்’ நூல் பல்லக்கில் ஏற்றப்பட்டு , நாதஸ்வர மேள தாளத்தோடு இடைநிலைப் பள்ளி மாணவர்கள் செங்கோலையும் மூவேந்தர்களின் கொடிகளையும் ஏந்திவர, மாணவியர்கள் மலர் தூவ, ஊர்வலம் விழா மண்டபத்திற்குள் நுழைந்த போது, விழா மண்டபம் பரபரப்பாகிப் போனது.

சிறப்புரையாற்றிய செந்தமிழ்ச் செல்வர் ஓம்சு தியாகராஜன் கூறுகையில், தமிழர் களம் மலேசியாவின் கொள்கையையும் நோக்கத்தையும் தான் நன்கறிந்திருப்பதாகவும், மேலும் தான் பல நூல் வெளியீட்டு விழாக்களுக்குச் சென்றுள்ளதாகவும் ஆனால் ஒரு நூல் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டு வெளியீடு செய்ய வேண்டும் என்பதற்கு எழுத்தாளர்கள் இந்த நூல் வெளியீட்டு விழாவினை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் நலன் முனியாண்டி முதல் நூலை எடுத்து வழங்க செந்தமிழ்ச் செல்வர் ஓம்சு தியாகராஜன் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து வந்திருந்த தமிழன் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மருத்துவர் தமிழ் சிலம்பரசன் கூறுகையில், உண்மையான இனப் போராளிகளை அடையாளம் கண்டு அவர்களை சிறப்பிப்பதில் தமிழர் களம் மலேசியா அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பதை தான் அறிந்திருந்தாலும், இந்த அளவிற்கு அறிஞர் குணா இங்கு இவர்களால் சிறப்பிக்கப்படுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியதுடன், தமிழகத்தில்கூட இதுவரை யாரும் இந்த அளவிற்கு அறிஞர் குணாவை சிறப்பித்ததில்லை என்றும் அவருக்கு இத்தகைய ஓர் சிறப்பான மரியாதையை வழங்கி , இந்நிகழ்வினை ஒரு வரலாற்றுப் பதிவாக தமிழர் களம் மலேசியா இயக்கத்தினர் இன்று பதிவு செய்துள்ளனர் என்றார்.

தமிழர் களம் மலேசியா தலைமைப் பொறுப்பாளர் ஏடம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன