அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மித்ரா – தமிழ் அறவாரிய இணை ஏற்பாட்டில் ஆசிரியர் தன்னாளுமைப் பயிற்சி
சமூகம்முதன்மைச் செய்திகள்

மித்ரா – தமிழ் அறவாரிய இணை ஏற்பாட்டில் ஆசிரியர் தன்னாளுமைப் பயிற்சி

புத்ராஜெயா, ஜூலை 10-

சமுதாய சிற்பிகள் என்று கருதப்படும் ஆசிரியர்களின் மேன்மையையும் மாறிவரும் சமூக சூழல், மாணவர்களின் போக்கு, மிகையான இணையப் பயன்பாடு, சிற்சில ஆசிரியர்களிடம் காணப்படும் பின்னடைவு இவற்றை யெல்லாம் எதிர்கொள்ளவும் தீயவற்றை ஒதுக்கி நல்லவற்றைப் பெருக்கவும் இன்னும் சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்கவும் ஏதுவாக ஆசிரியப் பெருமக்களுக்கு தன்னாளுமைத் தன்மையை வளப்படுத்தும் நோக்கில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் பரிந்துரையின்படி ‘ஆசிரியர் தன்னாளுமை மற்றும் திறன் வளப் பயிற்சித் திட்டம்’ குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மித்ராவின் சிறப்பு முன்னெடுப்பாகக் கருதப்படும் இந்த ‘ஆசிரியர் தன்னாளுமை மற்றும் திறன் வளப் பயிற்சி’ குறித்து இவ்வாரத் தொடக்கத்தில், கருத்துக்களம் நடைபெற்றது. மித்ரா – தமிழ் அறவாரிய இணை ஏற்பாட்டில் உருவாக உள்ள இந்த ஆசிரியர் மனவளப் பயிற்சி குறித்த ஆலோசனைக் கூட்டம், மித்ரா தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த கருத்துக்களத்தில் மொத்தம் 19 பேர் கலந்து சிறப்பித்தனர். தலைமை ஆசிரியர்கள், தமிழ்பள்ளிகளின் முன்னாள் மற்றும் இந்நாள் அமைப்பாளர்கள், தலைமை ஆசிரியர் சங்கத்தினர், தமிழ் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்-கள், தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியத் தரப்பினர் இதில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தனர். தமிழ் அறவாரியம் ஏற்பாடு செய்த இந்த கருத்துக் களம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி, மாணவர்களின் எழுச்சி, ஆசிரியர்களின் மாட்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் களத்தில் ஒற்றுமை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அவர்களின் தலைமையில் இயங்கும் மித்ரா-வின் துணைத் தலைமை இயக்குநர் ம. மகாலிங்கம் தலைமை வகித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன