பெர்சத்துவில் இணையத் திட்டமா? ஹிசாமுடின் விளக்கம்

கோலாலம்பூர் ஜூலை 10-

பிரி பூமி கட்சியில் இணைவதற்காக அம்னோவிலிருந்து விலகப்போவதில்லையென அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் உசேய்ன் மீண்டும் மறு உறுதிப்படுத்தியுள்ளார். பெர்சத்துவின் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீரிடமிருந்து தனிப்பட்ட அழைப்பு கிடைத்துள்ளதா என்று வினவப்பட்டபோது அக்கேள்விக்கு ஹிசாமுடின் பதில் வழங்க மறுத்துவிட்டார்.

எனினும் தொடக்கத்திலிருந்தே தமது நிலையை டாக்டர் மகாதீர் அறிந்து கொண்டிருப்பதாக அவர் சொன்னார். பலர் என்னைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிவருகின்றனர். ஆனால் தொடக்கத்தில் இருந்தே நான் அம்னோவிலிருந்து விலகப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக கூறி வருகிறேன் என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது ஹிசாமுடின் தெரிவித்தார்.

ஒற்றுமை தொடர்பாக யார் வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் .அவர்களை சந்திப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அம்னோவிலிருந்து விலக போவது குறித்து என்னிடம் கேட்க வேண்டாம். மிகப் பெரிய போராட்டத்திற்கானஆற்றலை அம்னோ கொண்டுள்ளது என தாம் நம்புவதாக ஹிசாமுடின் கூறினார்.

மலாய்க்காரர்களின் ஒற்றுமை குறித்த விவகாரம் வரும்போது அதற்கான சிறந்த அணுகுமுறையை நாம் கண்டறிய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். அம்னோவிலிருந்து வெளியேறுவது இப்போதைக்கு முடியாத காரியம் என்றாலும் மலாய் சமூகத்தை ஒன்றுபடுத்தும் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய விவகாரங்களை பார்த்துக் கொண்டிருப்பதை விட தொடர்ந்து பேச்சுக்களை நடத்த வேண்டுமென ஹிசாமுடின் கேட்டுக்கொண்டார்.

மலாய்க்காரர்களின் ஒற்றுமை என்ற பெயரில் டாக்டர் மகாதீருடன் இணைந்து பணியாற்றுவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என வினவப்பட்டபோது, முதலில் அவரது திட்டங்களை நாம் தெரிந்து கொள்வோம். அதன் பிறகு அவரை சந்தித்து அவரது திட்டம் குறித்து நாம் விவாதிக்கலாம் என்றார் ஹிசாமுடின்