கோலாலம்பூர் ஜூலை 10-

நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 14வது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியை பிடித்ததைத் தொடர்ந்து தமது 93ஆவது வயதில்  நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக டாக்டர் மகாதீர் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

ஜுலை 10 புதன்கிழமை தமது 94வது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் டாக்டர் மகாதீர் நாட்டிற்கு தொடர்ந்து சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என மீண்டும் உறுதி அளித்திருக்கின்றார். உலகில் பிரதமர் பதவியை வகித்து வரும் அதிக வயதான தலைவர் என்ற பெருமையை பெற்றிருக்கும் டாக்டர் மகாதீர் தொடர்ந்து தமது ஆற்றலையும் சக்தியையும் ஒன்று திரட்டி மலேசியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வருவதற்கு மிகவும் விவேகமான முறையில் அதே வழியில் செயல்பட்டுவருகிறார்.

டான்ஶ்ரீ முகைதீன் யாசினைத் தவிர தமது அமைச்சரவை உறுப்பினர்களில் பெரும்பாலோர் புதுமுகங்களாக இருந்தபோதிலும் அவர்களை அரவணைத்துக் கொண்டு நாட்டின் நிர்வாகத்தை சுமுகமாக நடத்தி வரும் முயற்சியில் டாக்டர் மகாதீர் வெற்றி பெற்று வருகிறார்.

பல்வேறு இனங்களையும் வெவ்வேறு சமயங்கள் மற்றும் கலாச்சாரப் பின்னணியை கொண்ட கொள்ள மலேசியர்களுக்கு தற்போதைய நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் நம்பிக்கை வாய்ந்த அனுபவம் மிக்க தலைவராகடாக்டர் மகாதீர் விலங்கு வருகிறார்.

14வது பொதுத் தேர்தலின்போது நம்பிக்கை கூட்டணி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. இந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது குறித்து பொது மக்களிடையே குறிப்பாக நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்கள் மத்தியில் தொடர்ந்து அதிருப்தி நிலவினாலும் நாட்டின் நிதி நிலைமையை கருத்திற்கொண்டு மிகவும் கவனமாகவும் அதே வழியில் கட்டம் கட்டமாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என டாக்டர் மகாதீர் கூறி வருகிறார்.

மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை கண்டறிந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்ட குழு ஒன்று அமைக்கப்படும் என இரண்டு நாட்களுக்கு முன்னர் டாக்டர் மகாதீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அரசாங்க நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளை அறிமுகப்படுத்துவதில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து விவேகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

1981ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி தொடங்கி 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரை சுமார் 22 ஆண்டுகாலம் நாட்டின் நான்காவது பிரதமராக பதவி வகித்த காலத்தில் உலக வரைபடத்தில் மலேசியாவுக்கு பெரிய அறிமுகத்தை தேடிக் கொடுத்த தலைவராகவும் துன் டாக்டர் மகாதீர் விளங்கினார்.

பினாங்கு பாலம், பல்முனை பெரு வழித்திட்டம், தேசிய காரான புரோட்டான் சாகா திட்டம், புத்ரா ஜெயா நிர்வாக மையம்,பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம், பார்முலா ஒன் கார்பந்தய அரங்கம் ,லங்காவியை பிரபல சுற்றுலா தீவாக மாற்றி அங்கு அதிகமான மேம்பாடுகளை கொண்டு வந்தது, ,போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக சீரிய நெடுஞ்சாலைகளை நிர்மானித்தது உட்பட மக்களுக்கு பயன் தரக்கூடிய பல்வேறு அற்புதமான மேம்பாட்டு திட்டங்களை நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கு தமது 22 ஆண்டுகள் அதிகாரத்தை டாக்டர் மகாதீர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

அவரது இந்த நிர்வாக திறன் தான் தொடர்ந்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. .இன்று மலேசியர்கள் அனுபவிக்கும் வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவதில் டாக்டர் மகாதீர் ஆற்றிய பங்கை நாம் மறந்துவிட முடியாது.

எப்போதுமே நீண்டகால தொலைநோக்குச் சிந்தனையை கொண்டவராக டாக்டர் மகாதீர் விளங்கியதால்தான் உலகமய மாற்றங்களுக்கு ஏற்ப மலேசியாவை நவீன படுத்துவதற்கான படுத்துவதற்கான திட்டங்களை அமல்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றார்.

தமது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் துணிவாக குரல் கொடுக்கும் அவரது போக்கும் அணுகுமுறையும் மூன்றாம் உலக நாடுகளில் அவருக்கு தனி ஒரு  மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. பண வீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தி மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை டாக்டர் மகாதீர் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை ஈடுபட வேண்டுமென மலேசியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கு டாக்டர் மகாதீர் தொடர்ந்து ஒரு தீர்க்கதரிசியாக செயல்படுவதற்கு இறைவன் அவருக்கு நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டும் அநேகன் இணையத்தள பதிவேடு வாழ்த்துகிறது.