ரவாங், ஜூலை 12-

ரவாங்கில் இயங்கி வரும் கிரி சக்தி ஞானசபை கன்னியாகுமரி காளிமடம் யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தின் ஏற்பாட்டில் 10ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேசிய நிலையிலான திருக்குறள் மனனப் போட்டி ஜூலை 13ம் தேதியும் 14ஆம் தேதியும் ரவாங் தமிழ்ப் பள்ளியிலும் ரவாங் நைஸ் பென்குவிட் மண்டபத்திலும் மிகச் சிறப்பாக நடைபெறும் என்று அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சிவநெறிச் செல்வர் கேகேஎம் கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தெரிவித்தார்.

நாளை சனிக்கிழமை ஜூலை 13-ஆம் தேதி திருக்குறள் மனனப் போட்டியின் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இதைத்தொடர்ந்து ”உய்வார்கள் உய்விக்கும் வள்ளுவம்” என்ற தலைப்பில் கொல்ல லீப்பிஸ் தெங்கு அம்புவான் அப்சான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முனைவர் துரைமுத்து சுப்பிரமணியம் உரையாற்றுவார்.
அதோடு மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை டத்தோஸ்ரீ பெர்ணாட் சந்திரன் அதிகாரப்பூர்வமாக உரையாற்றி தொடக்கி வைத்தார்.

அன்றைய தினம் இரவு திருக்குறள் மனனப் போட்டிக்கான முதல் சுற்று நடைபெறும். மறுநாள் காலை 7 மணி தொடங்கி இரவு ரவாங் தமிழ்ப்பள்ளியில் திருக்குறள் மனனப் போட்டிக்கான இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று போட்டிகள் நடைபெறும்.

பிற்பகல் 2 மணிக்கு நைஸ் பென்குவிட் மண்டபத்தில் போட்டிக்கான நிறைவு விழாவும் பரிசளிப்பு அங்கமும் நடைபெறும் என அவர் தெரிவித்தார். 6 முதல் 12 வரை உள்ள மலேசிய பிள்ளைகள் அனைவரும் இந்த போட்டியில் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள். மேல் விவரங்களுக்கு 012-3301553