காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியின் இணை கட்டடம்: தொழிலதிபர் ஜிவி நாயர் 1 லட்சம் நன்கொடை

பூச்சோங், ஜூலை 12-

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் உருமாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் அண்மையில் பூச்சோங் காசல்பீல்டு தமிழ்பப்பள்ளியில் இத்திட்டம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த உருமாற்று திட்டத்தை சிலாங்கூர் மாநில கல்வி அமைச்சில் இருந்து அப்துல் கபார் பின் பாகார் தொடக்கி வைத்தார். இந்த உருமாற்று திட்டம் மாணவர்களின் கல்வியில் பின்தங்கியுள்ளனர் என்பதை கண்டு அவர்களுக்கு தக்க கல்வியை கற்றுக் கொடுத்து அவர்களையும் மற்ற மாணவர்களைப் போல கல்வியில் முன்னேற்ற  செய்யும் நடவடிக்கையாகும்.

இந்தத் திட்டம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் அமல்படுத்தும் என்று கல்வியமைச்சில் இருந்து வருகை தந்திருந்த அப்துல் கபார் தெரிவித்தார். இந்த திறப்புவிழாவில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 12 தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர் என்று அப்பள்ளியின் வாரிய தலைவர் நாகமுத்து தெரிவித்தார்.

முன்னதாக அப்பள்ளியில் கால்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன. பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் மொத்தம் 588 மாணவர்கள் பயில்கிறார்கள். அடுத்த ஆண்டிற்கான முதலாம் ஆண்டு 100 மாணவர்கள் பதிந்துள்ளனர்.

தற்போது பள்ளியில் இடப் பற்றாக்குறை இருப்பதால் இணை கட்டடம் ஒன்று கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டடத்திற்கு 3 லட்சம் வெள்ளி வரையில் நிதி தேவைப்படும் என்று வாரியத்தலைவர் நாகமுத்து தெரிவித்தார். அப்பள்ளிக்கு சிறப்பு வருகை புரிந்த பூச்சோங் வட்டார தொழிலதிபர் ஜி வி நாயர் பள்ளியின் இணை கட்டடத்திற்கு ஒரு லட்சம் வெள்ளி நிதி வழங்குவதாக அறிவித்தார்.

இப்பள்ளியில் தான் தம்முடைய மூன்று பிள்ளைகளும் படித்தனர். அந்த காலக்கட்டத்தில் வசதி குறைந்த நிலையில் இப்பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாம் நன்றாக அறிந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தமிழ்ப்பள்ளிக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப முன் வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இத் தமிழ்ப் பள்ளியில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிக்கு அனுப்பக்கூடும் . எனவே வகுப்பறைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அந்தத் தொகையை வழங்க தாம் முன்வந்ததாக ஜீவி நாயர் தெரிவித்தார்.