கோலாலம்பூர், ஜூலை 12-

மலேசிய இளம் அறிவியல் ஆய்வாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற அறிவியல் ஆய்வு தொடர்பான போட்டியில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற மண்ணை பரிசோதிக்கும் கருவியை கண்டுபிடித்து, தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

3ஆம் ஆண்டைச் சேர்ந்த யுவிகா மகாகணபதி, 4ஆம் ஆண்டைச் சேர்ந்த கவிஷா நாகராஜன், கைலேஷ் சரவணன் ஆகியோர் இந்தக் கண்டுபிடிப்புக்கான தங்கப்பதக்கத்தை வென்றனர். விவசாயம் என்பது தற்போது மிகப்பெரிய துறையாக திகழ்கின்றது.

ஆரம்ப காலத்தில் விவசாயம் சார்ந்த துறைகளில் ஈடுபட்ட நாம் நாடு மேம்பாடு காணும் தருணத்தில் அனைத்தையும் மாற்றிக் கொண்டோம். மீண்டும் விவசாயத்துறை நோக்கி பயணிக்கும் காலகட்டம் இது என்பதால் அது பயனுறும் வகையில் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும் என இம்மாணவர்கள் முடிவு செய்தனர்.

அந்த வகையில் தற்போது காய்கறிகளை பயிரிடுவதற்கு ஏற்ற மண் எது என்பதை கண்டறியும் கருவியை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் ஒரு மண்ணை பரிசோதித்து பார்க்கும் பொழுது அதில் எம்மாதிரியான காய்கறிகளை பயிரிட முடியும் என்பது குறித்தும் துள்ளிதமாக அறியப்படுகின்றது.

இந்த கண்டுபிடிப்பிற்காக மலேசிய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் தங்கப்பதக்கத்தை மாணவர்கள் வென்றுள்ளனர். பெற்றோர்களின் அரிய முயற்சியால் இந்த வெற்றியை பிள்ளைகளுக்குக் எட்டியிருக்கின்றது. மூன்று மாதங்களாக இந்த ஆய்வை மேற்கொண்டு இந்தக் கருவியை மாணவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் 10 நாடுகளில் இருந்து சுமார் 600 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.

ஈரான், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, ஸ்ரீலங்கா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்த போட்டியாளர்கள் மத்தியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்று இருப்பது சமுதாயத்திற்கு மிகப் பெரிய பெருமையைத் தேடித் தந்துள்ளது.