கோலாலம்பூர், ஜூலை 13-

மலேசிய இளம் அறிவியல் ஆய்வாளர்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற அறிவியல் ஆய்வு தொடர்பான போட்டியில் மூலிகை முறையிலான உடல் சூட்டைத் தணிக்கும் பிளாஸ்டர் ஒன்றை தயாரித்து ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கத்தையும் சிறப்பு விருதையும் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார்கள்.

சோற்றுக்கற்றாழை, புதினா, செம்பருத்தி பூ இலை, ஆகியவற்றை பயன்படுத்தி இந்த மூலிகை பிளாஸ்டரை தயாரித்த நந்தகிஷோர் சரவணன் (வயது 8), தீபிகா ஸ்ரீ விக்னேஸ்வரன் (வயது 7), கிஷாந்தினி சண்முகம் (வயது 7) மூன்று மாணவர்கள் தான் இந்த வெற்றிக்கு சொந்தக்காரர்கள்.

கடந்த ஜூலை 9,10 ஆகிய இரு தினங்களில் இந்த அறிவியல் ஆய்வுக்கான போட்டி தலைநகர் மென்ரின் கோர்ட் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இதற்கு முன்னதாகவே இந்த மாணவர்கள் இதே ஆய்வுக்கான படைப்பினை அனைத்துலக இளைய ஆய்வாளர்கள் கண்காட்சியில் படைத்து மூன்றாம் நிலை காண பரிசை வென்றுள்ளார்.

இம்மாதம் மலேசிய இளைய அறிவியல் ஆய்வாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 10 நாடுகளைச் சேர்ந்த 180 குழுக்கள் பங்கேற்றன. ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை இப் போட்டியில் பங்கேற்று தங்களின் ஆய்வுகளை படைத்திருக்கின்றனர். ரவாங் தமிழ்ப்பள்ளி தங்கப்பதக்கத்தை பெற்றதோடு மட்டுமின்றி இப்போட்டியில் சிறப்பு விருதையும் வென்றது.

ரவாங்கில் இயங்கிக்கொண்டிருக்கும் மஞ்சா பிந்தார் பாலர் பள்ளியின் லிட்டல் சைண்டிஸ்ட் கிளப்பின் ஏற்பாட்டில் இந்த மூன்று மாணவர்களும் இப்போட்டியில் பங்கேற்றனர். மஞ்சா பிந்தார் பாலர் பள்ளியில் தோற்றுநர் மாலினி ஏகநாதன், அதன் ஆசிரியர் சங்கீதா சரவணன் ஆகிய இருவருமே இந்த மாணவர்களின் வெற்றிக்கு மூல காரணமானவர்கள். இருந்தபோதிலும் ரவாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கமலா கணேசனும் இந்த மாணவர்களுக்கு முழு ஆதரவை வழங்கியதாக இம் மாணவர்களின் பெற்றோர்கள் கூறினர்.

இவர்களின் இந்த வெற்றிக்கு தொடர்ந்து அடுத்தபடியாக கொரியாவில் நடைபெறும் ஒரு உலகளாவிய அறிவியல் ஆய்வாளர்கள் போட்டியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பும் இம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள்தான் இதுவரையில் நடைபெற்ற அறிவியல் ஆய்வாளர் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற ஆக வயது குறைந்த மாணவர்கள் ஆவர்.

அதற்காக அவர்களை தயார் படுத்திய மஞ்சா பிந்தார் பாலர் பள்ளியின் லிட்டல் சைண்டிஸ்ட் கிளப்பிற்கும் ஆசிரியர்களுக்கும் ரவாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அம்மாணவர்களின் பெற்றோரும் ரவாங் மக்கள் சமூக நல இயக்கத் தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.