புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தமிழ்ப்பள்ளிகள் வரலாற்றில் முனைவர் ரஹீமின் புதிய முயற்சி!
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளிகள் வரலாற்றில் முனைவர் ரஹீமின் புதிய முயற்சி!

கோலாலம்பூர் ஜூலை 13,

‘தமிழால்’ நான் என்ற தமது சுயசரிதை நூலை வெளியிட்டதன் மூலம் ‘தமிழால் நாம்’ என்ற சமுதாய பணிக்கு தம்மை விதைத்து சமுதாயத்தின் தூண்டுகோளாக உருவாகி இருக்கின்றார் முனைவர் ரஹீம் முன்னா.

அவரின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்ட வேளையில், நூல் வெளியீட்டிற்கு வந்த பொது மக்கள் ‘தமிழால் நாம்’ என்ற திட்டத்திற்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்திருக்கின்றனர்.

ஈப்போ மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரும் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும் தன்முனைப் பேச்சாளருமான முனைவர் ரஹீம் முன்னாவின் ‘தமிழால் நான்’ என்ற நூல் மலாயாப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் உள்ள ஆடிட்டோரியத்தில் வெளியீடு கண்டது. சுப. நாராயணசாமி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தம்மை உதாரணமாக காட்டிய ரஹீம் தமிழ்ப்பள்ளிகள் மொழியோடு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நெறிமுறைகளையும் கற்றுத் தருவதாக கூறினார்.

இந்த நூல் வெளியீட்டு விழாவின் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு தமிழ் பள்ளி மாணவர்களுக்காக ‘தமிழால் நாம்’ என்ற அற நிதியையும் ரஹீம் முன்னா தொடக்கி வைத்தார்.

தாம் எழுதிய புத்தகத்தின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் அனைத்தும் இந்த அற நிதியில் சேர்க்கப்படும் அவர் கூறினார். அதில் இருந்து ஒரு ரிங்கிட்டும் தமக்கு சொந்தமில்லை என்று கூறிய அவர் அதன் தொகையை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயன்படுத்த போவதாக கூறினார்.

அதோடு இந்த அறநிதியை முறையாக கண்காணித்து அதன் நடவடிக்கைகள் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஆறு அறங்காவலர்களையும் நியமித்திருப்பதாக ரஹீம் முன்னா தெரிவித்தார்.

தமிழால் நாம் எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக அந்த முயற்சியின் தூண்டுகோலாக ‘தமிழால் நாம்’ அறநிதியை தொடங்கியதாகவும் இந்த நிதியின் மூலம் எதிர்காலத்தில் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் உட்பட பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி தர முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வறுமையின் பிடியில் மிகவும் தத்தளித்த வேளையில், கல்வி ஒன்றே தம்மையும் தன் குடும்பத்தையும் கரை சேர்த்துவிட்டதாக தெரிவித்த ரஹிம், கடந்து வந்த பாதைகளை சுவராசியமான பயணமாக்கி புத்தக வடிவில் மக்களின் கைகளில் தந்திருப்பதாக கூறினார்.

மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவிச்சந்திரன் நூல் ஆய்வு செய்தார் . நூலாசிரியர் ரஹீம் முன்னா அவர்களை பெர்னாமா தமிழ் செய்தி வாசிப்பாளர் ஜமுனா வேலாயுதம் கவிதை பாணியில் அறிமுகம் செய்து நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினார்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ சகாதேவன், சிலாங்கூர் மாநில தமிழ் பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன், மகிழம்பூ தமிழ் பள்ளியின் ஆசிரியர்கள் அப்பள்ளியின் மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விரிவுரையாளராக பணியை தொடங்கிய பின்னர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று தன்முனைப்பு உரையை வழங்கியிருப்பதாகவும் தமது இந்த உரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் சென்று சேர்ந்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

தமிழால் நாம் எனும் திட்டத்தில் பங்குகொள்ள விரும்பும் பொது மக்கள், தமிழால் நான் எனும் நூலினை வாங்குவதன் மூலம் அதில் பங்குகொள்ள முடியும் என்பதால் முனைவர் ரஹீமிற்கு தங்களின் ஆதரவை அளிக்க அழைக்கப்படுகின்றனர்.

முனைவர் ரஹீமின் இந்த அரிய முயற்சிக்கு அநேகனின் அன்பு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன