கோலாலம்பூர், ஜூலை 15-

பிரதமர் துறையின்கீழ் இயங்கும் மித்ரா முறையாக செயல்படுகிறது; அத்துடன் சரியான பாதையிலும் பயணிக்கிறது என்று ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை மலேசிய நண்பனில் மித்ராவைப் பற்றி கண்ணன் இராமசாமி கருத்துத் தெரிவித்திருப்பதைப் பற்றி செய்தியாளர்கள் வினவியபோது மித்ரா துணைத் தலைமை இயக்குநர் ம.மகாலிங்கம், விளக்கம் அளித்தார்.

இராமசாமி எங்களிடம் கேட்டிருந்தால் அவருக்கு விளக்கம் கிடைத்திருக்கும். அவர் குறிப்பிட்டிருப்பதைப் போல இருபது விழுக்காட்டு நிதிகூட பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்பது தவறான தகவல் ஆகும். இதுவரை 98 அரசு சாரா அமைப்புகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு 31 மில்லியன் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் மலேசிய நண்பனில் தவறான தகவலை வெளியிட்டு சமூகத்தில் அரசாங்கத்தின்மீது தவறான தோற்றத்தை கண்னன் இராமசாமி ஏற்படுத்தி இருக்கிறார்.

அதைப்போல, மித்ரா மெதுவாக செயல்படுவதாகக் குறிப்பிட்ட தகவலும் உண்மைக்கு மாறானது. மித்ராவில் தலைமை இயக்குநரும் துணைத் தலைமை இயக்குநரும் கடந்த அக்டோபர் மாத பிற்பகுதியில்தான் இணைந்தோம். தொடர்ந்து, நவமபர்-டிசம்பர் மாதங்களில் செடிக் மீதான கணக்காய்வை தேசிய கணக்காய்வுத் துறை மேற்கொண்டது.

அதேக் காலக்கட்டதில் வாரந்தோறும் இந்திய அமைப்புகளுடனான கட்டங்களை நடத்தி சுமார் 500 அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து சமுதாயப் போக்கை உணர்ந்த நிலையில் டிசம்பர் 29-ஆம் நாள் மித்ரா என்னும் பெயர் சூட்டப்பட்டது.

தொடர்ந்து மானிய பரிவர்த்தனை குறித்து அமைப்பு ரீதியான கட்டமைப்பு(ஜிஎஸ்எம்) ஏற்படுத்தப்பட்டு ஜனவரியில் மித்ரா-விற்கான இணையதளமும் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி முதல் மார்ச் மாதம்வரை 363 மில்லியன் சம்பந்தப்பட்ட 414 விண்ணப்பங்களை மித்ரா பெற்றது. இதில், 15 மில்லியன் மானியம் சம்பந்தப்பட்ட முதல் தவணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு செய்யப்பட்டது. அதைப்போல 16 மில்லியன் சம்பந்தப்பட்ட இரண்டாவது தவணை கடந்த ஜூன் மாதம் பூர்த்தியானது. இந்த விவரங்களை அறிந்தாலே, மித்ரா எந்த அளவிற்கு விரைந்து காரியமாற்றுகிறது என்பதும் இந்திய சமூக நலம் கருதி தகுதியான அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கி வருகிறது என்பதும் சாதாரணமாக விளங்கும்.

அனைத்துக்கும் மேலாக, செடிக் காலத்தில் 58 பணியாளர்கள் இருந்த வேளையில் தற்பொழுது 28 ஊழியர்களை மட்டும் கொண்டு மித்ரா செயல்படுகிறது. தேவையான பணியாளர்களைக் கேட்டு மித்ரா பலதடவை முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. காரணம், நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பொதுச் சேவை ஊழியர் எண்ணிக்கையில் 10% அளவுக்கு குறைக்கும் நடவடிக்கையில் அரசு உறுதியாக இருக்கிறது.

அனைத்திற்கும் மேலாக, முந்தைய ஆட்சியைப்போல இன அடிப்படையிலான கட்சி இல்லாததால், மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரை தாங்கள் எதிர்நோக்கும் அனைத்து சிக்கலுக்கும் தீர்வை நாடி புத்ராஜெயாவில் உள்ள மித்ரா அலுவலகத்தை நாடுகின்றனர்.

இப்படி காலம் கருதா கடப்பாட்டு உணர்வுடன் செயல்படும் மித்ரா, ஓய்வறியா உழைப்பை இந்திய சமுதாயத்திற்கு அளித்து வருகிறது என்று மகாலிங்கம் மேலும் விளக்கம் அளித்தார்.