பிக்பாஸ் வீட்டின் வனிதா விஜயகுமாரை, இனி பிக்பாசே மறந்தாலும், தமிழகமும் உலகத் தமிழர்களும் மறக்க மாட்டார்கள் என்பது வெள்ளிடை மலை. கூச்சலுக்கும் பாய்ச்சலுக்கும் சொந்தக்காரியான வனிதா இன்றி அந்தப் பிக்பாஸ் வீடு கொஞ்சம் போர் தட்டிதான் செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை.

இரண்டாவது நபராகப் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா, கமல்ஹாசனிடம் பேசியபோது, ‘நான் நல்லாத்தானே கொலையெல்லாம் செஞ்சேன், நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியவர், நான் நானாகவே இயல்பாக இருந்தேன். நான் இந்த வீட்டில் நடிக்கவே இல்லை. அதனால் தான் மக்கள் வெளியேற்றி இருக்கலாம்’ என்று கூறினார்.

தாய்மையைப் பற்றிப் பேசும்போது கண்ணீர் வந்தும் அதனை மறைத்துக் கொண்டு, சிரிப்பால் மழுப்பி வனிதா அங்கிருந்து சென்றபோது, நமக்கு நிறைய விசயங்களைப் பாடமாக விட்டு சென்றதை நாம் மறுக்க முடியாது. அப்படி வனிதாவிடம் இருந்து கற்றுக்கொண்ட சில விசயங்கள் இவை :

1. திருமண வாழ்வில் ஒரு பெண் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அத்தனை சீக்கிரம் வெளி உலகித்திற்குப் பகிரங்கப்படுத்தமாட்டாள். ஆனால் பிரபலம் என்று சொல்லும் போது, அவல் கிடைத்தால் சமூகமும் மீடியாவும் அத்தனை சீக்கிரம் விட்டுவிடுமா? தேரை இழுத்துத் தெருவில் விட்டுக்கொண்ட அவரது குடும்ப விவகாரத்தால் பல்வேறு விமர்சனங்களை வனிதா எதிர்நோக்கினார். மேகமராக்கள் அவரை வளைத்து வளைத்து செய்தியாக்கின. அத்தனையும் கடந்து பிக்பாஸ் வீட்டுக்குள் 60 கேமராக்கள் இருக்கும் என்று தெரிந்தே வந்தார். இத்தனைக்குப் பின்பும் ஒரு பெண் இங்கு வந்து நிற்பதற்கு ஒரு தில் வேண்டும்.

2. இதன் மூலம் பணம் என்பது நிர்பந்தமாக இருக்கலாம், ஆனால் மான அவமானங்களுக்குப் பயந்த ஒரு பெண் நிச்சயம் இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை உடைத்துக் காட்டினார் வனிதா. தாம் யார் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அவருக்குக் கைமேல் பலனாகக் கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுப் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதில் மெனகெட்ட அவர் தன் பாத்திரத்தை பாதுகாப்பதில் நழுவவிட்டு உடைத்தார் என்பதும் இங்குப் பாடம்தான்.

3. தனக்குப் பட்டத்தை நேரடியாகக் கூறினார். கேமராவுக்காக நடிக்கவில்லை. வனிதா என்றால் இப்படித்தான் என்று பழக்கப்படுத்தி வைத்தார். அங்குக் கூச்சல் என்றால் நிச்சயம் அவர் இருப்பார் இல்லையென்றால் அதனை முடிப்பார்.  பெண்ணாய் தைரியமாக நின்றார். தமக்கு சரி என்றதை பேசினார்.  வாயே திறக்கமுடியாத பெண்களுக்கு இந்த வரிகளின் அர்த்தம் புரியும்.

4. நாட்டாமை செய்வது, சில இடங்களில் மூட்டி விடுவது, வேவு பார்ப்பது, தாம் சொல்வதை அத்தனை பேரும் கேட்கவேண்டும் என்று நினைப்பது, பிரச்சனைகளைப் பெரியதாக்கி பேசுவது, அவரின் சத்தமே அங்குப் பெரிதாய் இருக்க வேண்டும் என்பது அவரது குணமாக இருந்தது. இதுவெல்லாம் தான் வனிதாவை இறுதியில் மக்களின் மூலம் போட்டுத் தள்ளியிருக்கிறது. இப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாய் இருந்திருக்கின்றார் வனிதா. இதையெல்லாம் பேசும் நாமும் அப்படிச் செய்திருப்போம், செய்துக்கொண்டிருக்கின்றோம், செய்வோம். ஆனால் ஊருக்கு என்று வரும்போது முகநூலிலும் டுவிட்டர்களிலும் வார்த்தைகள் அனல் பறக்கும்.

5. வனிதாவின் சண்டைகளைப் பார்த்த இந்த மீம்ஸ் உலகம், இந்த வாய்க்காகதான் மூன்று கல்யாணம், அதனால்தான் புருஷன் ஓடிட்டான் என்று நிறையக் கிண்டலடித்தன. இதற்குக் காரணம் அவரே என்றாலும் இந்தப் பேச்சுகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை ஒரு பெண்ணாய் தாயாய், அவரும் அவரது பிள்ளைகளும் பொறுத்துக்கொண்டே ஆகவேண்டும் என்ற நிலை வந்துள்ளது.

6. வனிதா என்ற தாயின் போராட்டத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை கதை என்ன என்பது இங்கு அத்தனை பேருக்கும் முழுதாய்த் தெரியாது. என்றாலும், அவரோடு இருந்த சிலர் அவருடனே வாழ்ந்து அல்ப விளம்பரங்களுக்காக இப்போது வனிதாவை குறைகள் சொல்லி, தங்களை மீடியாக்களில் நியாயப்படுத்திகொள்கின்றனர். இந்த நிலை வனிதாவுக்கு மட்டுமல்ல சமூக வலைத்தளங்களில் எத்தனையோ பகிர்வுகளில் நாம் பார்த்திருக்கலாம்.

7. அவர் செய்த தவறுகளுக்கு நிச்சயம் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறித்தான் ஆகவேண்டும். அதுவே நியாயம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அவரின் குறைகளைப் பார்த்த நமக்கு நல்லதையும் பார்க்க கற்றுக்கொடுத்தது அவர் விடைபெற்ற அந்தத் தருணம். மேலும் மற்ற போட்டியாளர்களுக்கு அவர் அறிவுரையாகக் கூறியபோது, ‘நீங்கள் நீங்களாகவே இருங்கள், மக்கள் என்ன நினைக்கின்றார்கள், மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை யோசிக்கவே வேண்டாம். உங்கள் மனதுக்குச் சரி என்று பட்டதையே செய்யுங்கள். என்று கூறினார். இது எத்தனை பெண்களுக்குச் சுதந்திரமான நம்பிக்கயை ஏற்படுத்தி இருக்கும் என்பது அவரவருக்கே தெரியும்.

8. இறுதியாகத் தன்னோடு இருந்த தோழி வனிதா சரியானவர் என்று பேசாமல், அப்படி இருப்பதற்குத் அவர் சந்தித்த போராட்டங்களே காரணம் என்பதை அருகில் இருந்து பார்த்த ரேஷ்மா கூறியபோது, ஒரு தாயின் இனம் புரியாத பற்றுதல் அந்தப் பேச்சில் தென்பட்டது. அந்தக் கண்ணீரின் ஈரத்தில் வனிதாவின் மீதிருந்த வெறுப்பும் சற்று தணியத் தொடங்கியது  என்பதுதான் உண்மையான உண்மை. மனம் கவர்ந்து சென்றார். விட்டுக்கொடுக்காத அந்த நட்பினால் ரேஷ்மாவின் மீது மரியாதையும் கூடியது.