துரோலாக், ஜூலை 16-

இவ்வட்டாரத்தில் உள்ள ஃபெல்டா நில மேம்பாட்டுப் பகுதியைச் சேராத தென் துரோலாக் பூர்வக் குடியினர் வாழும் புறநகர் பகுதியின் மோசமான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணியில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி இண்ட்ராஃப் களமிறங்கியுள்ளது.

குடியிருப்புப் பகுதியில் இருக்கும் மோசமான சாலைகள், மேடுபள்ளமான பாதைகள், உடைந்த பாலம், செம்பனை மரக் கிளைகள் விழுந்துள்ள ஆறு போன்ற பிரச்சனைகளை அங்கு வாழும் பூர்வக்க் குடி மக்கள் எதிர்நோக்கி வருகிறார்கள். இவ்விவகாரத்தை காவல்துறையின் உளவுப்பிரிவின் தலைமைப் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்று பல ஆன்டுகளாக இவ்வட்டாரத்தில் வசித்து வரும் ஐயீங் தங்களின் பார்வைக்குக் கொண்டு வந்ததாக தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி இண்ட்ராஃப்பின் ஒருங்கிணைப்பாளர் நவனீத் தெரிவித்தார்.

விவரங்களைப் பெற்ற பின்னர் பிரச்சனைக்குள்ளான தென் துரோலாக் வட்டாரத்தில் அமைந்துள்ள கம்போங் சுங்கை ஜெந்தோங் எனும் பகுதிக்கு தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி இண்ட்ராஃப் உறுப்பினர்கள் உடனடியாகப் பார்வையிட விரைந்தனர்.

இங்குள்ள பூர்வக் குடி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஓவ்வொன்றாக இண்ட்ராஃப் அமைப்பினருக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி ஐயீங் எடுத்துரைத்தார்.

“பூர்வக்குடியினரும் நம்மைப் போல் சாதாரண மக்கள். இது போன்ற சிக்கலை எதிர்நோக்குவதால் அவர்கள் அருகிலுள்ள பட்டணத்துக்கானத் வெளித்தொடர்பை இழக்க நேரிடுகிறார்கள். இதனால் இங்குள்ள மக்களின் வளர்ச்சி தடைபடுகின்றது. இவை இவர்களின் அடிப்படை உரிமை. இதனால் நம்மிடயே பொருளாதாரத்திலும் வசதி வாய்ப்புகளிலும் வேறுபாடு ஏற்படுவதால் தேசிய நீரோட்டத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.” என ஐயீங் தெரிவித்தார்.

மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பூர்வக் குடிமக்களின் நலன் பாதுக்காக்கப்பட வேண்டும் எனவும் இது போன்ற நடவடிக்கைகள் ஒவ்வொரு மலேசியக் குடிமகனின்/மகளின் கடமை. எனவே, தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி இண்ட்ராஃப்ப்பின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாக இந்த கம்போங் சுங்கை ஜெந்தோங்கின் மேம்பாட்டு நடவடிக்கை அமைகிறது எனவும் பின் தள்ளப்படுகிற மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொறுப்பை தாங்கள் கையில் எடுத்திருப்பதாக நவனீத் கூறினார்.

எனவே, இவ்விவகாரத்தை தேசிய ஒற்றுமை, சமூகநலத்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பொன். வேதமூர்த்தியின் பார்வைக்குக் கொண்டு செல்ல இருப்பதாகவும் தஞ்சோங் மாலிம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லி காங் உடன் இது தொடர்பாக கலந்தாலோசிக்க இருப்பதாகவும் நவனீத் தெரிவித்தார்.

மேலும், பூர்வக்குடி மக்களின் நலம் குறித்து மனித உரிமை ஆணையம் (சுஹாக்காம்) கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தக் கருத்துகள் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.