ஒரே நாளில் 33 லட்சம் வெள்ளியை நஜீப் செலவு செய்தார்!

கோலாலம்பூர் ஜூலை 16-

ஒரே நாளில் தமக்குச் சொந்தமான இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 33 லட்சம் வெள்ளியை நஜீப் செலவிட்டார் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்திலுள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்கு அவர் 33 லட்சம் வெள்ளியை கிரெடிட் கார்டு மூலம் செலவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆம் பேங்கின் கிரெடிட் கார்டு அனுமதி மற்றும் மோசடி பிரிவின் முத்த அதிகாரியான யோ இங் லியோங் (வயது 58)இதனைத் தெரிவித்தார்.

ஆர் சி இன்டர்நேஷனல் சென் பெர்ஹாட்டில் 4 கோடியே 20லட்சம் வெள்ளி நிதி முறைகேடு தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு எதிரான வழக்கு விசாரணையின் 37வது நாளில் சாட்சியமளித்தபோது யோ இங் லியோங் இதனைத் தெரிவித்தார்.

விசா பிளாட்டினம் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரி.ம 456,360.51 மற்றும் மாஸ்டர் பிளாட்டினம் கார்டை பயன்படுத்தி ரி.ம 2,864,309.54 நஜீப் செலவு செய்திருப்பதாக அரசு தரப்பின் 47ஆவது சாட்சியான யோ கூறினார்.

2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி நஜீப் தமது 2 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இவ்வாறு செலவு செய்துள்ளார். அந்த இரண்டு கார்டுகளையும் பயன்படுத்தி நஜீப் 30 லட்சம் வெள்ளி வரை செலவு செய்ய முடியுமென அவர் சொன்னார். வழக்கு விசாரணை தொடரும்.