டத்தோஸ்ரீ வேள்பாரி, தமிழ்நேசன் நிர்வாகம் மீது முன்னாள் ஊழியர்கள் போலீஸ் புகார்?

கோலாலம்பூர் ஜூலை 16-

தென்கிழக்காசியாவில் மிகவும் பழமையான நாளிதல் என்ற பெருமையை கொண்டிருந்த தமிழ்நேசன் கடந்த ஜனவரி மாத இறுதியோடு வெளிவராது என அதன் நிர்வாகம் அறிவித்திருந்தது. அங்கு பணியாற்றியவர்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாத ஊதியம் வழங்கப்படும் என உறுதி கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மார்ச் மாத ஊதியம் இன்னமும் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டு காலமாக வேலை செய்த எங்களுக்கு எந்த நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை என்பதை முன்னிறுத்தி அதன் ஊழியர்கள் போலீஸ் புகார் மேற்கொள்ளவிருப்பதாக சமுகத் தளங்களில் செய்திகள் பரவுகின்றன.

முன்னதாக தங்களின் பெயரில் வருமானத்தில் பிடித்தம் செய்து கொள்ளப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு முறையாக செலுத்தப்படவில்லை என்பதை காரணம் காட்டி இந்த போலீஸ் புகார் முன்னெடுக்கப்படுகின்றது. சொஸ்கோ, இபிஎப், காப்புறுதித் திட்டம் என ஊழியர்களில் வருமானத்திலிருந்து ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் பல மாதங்களாக அந்தத் தொகை செலுத்தப்படவில்லை. இதனால் சிறப்பு சலுகைகளையும் இழந்துள்ளதை காரணம் காட்டி இந்த போலீஸ் புகார் செய்யப்படுவதாக தெரிகின்றது.

இந்த விவகாரம் குறித்து தமிழ் நேசனின் உயர்மட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அது தோல்வியில்தான் முடிந்ததாக தெரிகின்றது. இனியும் காலம் தாழ்த்தாமல் போலீஸ் புகாரை மேற்கொண்டு சட்ட ரீதியில் இந்த பிரச்சினையை அணுகுவதற்கு தமிழ்நேசன் முன்னாள் ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து புதன்கிழமை காலை 10 மணிக்கு போலீஸ் புகார் ஒன்றை 40 பணியாளர்களும் கோம்பாக் போலீஸ் நிலையத்தில் மேற்கொள்ள விருகின்றார்கள். 1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் நேசன் தெற்கு ஆசியாவிலேயே மிகவும் பழமையான நாளிதழ் என்ற பெருமையை கொண்டிருந்தது. துன் சாமிவேலு அவர்களின் ஒத்துழைப்போடு இத்தனை ஆண்டுகாலமாக சிறப்பாக வழி நடந்து வந்த தமிழ் நேசன் திடீரென மூடப்பட்டது அதன் வாசகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் தகவலாக இருந்தது.

புதிய மாற்றத்தோடு புதுப்பொலிவுடன் தமிழ்நேசன் வெளிவரும் என வதந்திகள் அவ்வப்போது பரவி வந்தாலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அங்கு வேலை செய்த பணியாளர்களுக்கும் எந்த ஒரு முறையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக அவர்களே முன்வந்து இந்த போலீஸ் புகாரை செய்கின்றார்கள்.

40 ஊழியர்களின் பிரச்சினையை தீர்ப்பது தமிழ் நேசனின் நிர்வாகத்திற்கும் டத்தோஶ்ரீ வேள்பாரிக்கும் மிகப் பெரிய காரியமல்ல என்று சமூக தலைவர்கள் கூறுகின்றார்கள்