பொன்.வேதமூர்த்தி தலைமையில் மலேசிய முன்னேற்றக் கட்சி உதயம்!!

புத்ராஜெயா, ஜூலை 16-

மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்.ஏ.பி.)யை தேசிய சங்கப் பதிவகம் முறைப்படி பதிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

மலேசிய இந்தியர்களின் அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார, சமய, சமூக நலம் சார்ந்து மலேசிய முன்னேற்றக் கட்சி வகுத்துள்ள கொள்கை அடிப்படையில் தன் அரசியல் பயணம் இனி தொடரும்.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் மலேசிய இந்திய சமுதாயம் கொண்டுள்ள புது நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் மலேசிய முன்னேற்றக் கட்சி, ஒரு மக்கள் நல இயக்கம் என்னும் அடிப்படையில் தன்னுடைய பங்கை செவ்வனே ஆற்றும்.

புதிய சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தவும் அவர்களின் அடிப்படை உரிமைகளை நிலை-நிறுத்தவும் எங்களின் இந்த புதிய அரசியல் இயக்கம் இலக்கு கொண்டுள்ளது.

பல்கலாச்சாரத் தன்மை கொண்ட மலேசியாவில், நம் முன்னோர் கண்ட இலட்சியம் யாவும் நிறைவேற மலேசிய முன்னேற்றக் கட்சி பாடுபடும் அதேவேளை, சமுதாயத்தின் உள்ளடக்கம், சம உரிமை, தரமான வாழ்க்கை, பாரம்பரியத் தன்மையை தற்காத்தல், ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும்.

மலேசிய புதிய அரசாங்கத்தின்கீழ், ‘நாட்டு வளப்பம் யாவும் மக்கள் அனைவ-ருக்கும்” என்னும் கொள்கை நிறைவேற பாடுபடும் அதேவேளை, நம்பிக்கைக் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள அத்தனை அரசியல் கட்சிகளுடனும் அனுக்கமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மலேசிய முன்னேற்றல் கட்சி செயல்படும்.

இந்தப் புதிய அரசியல் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டி இருப்பதால் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நான் விடுபடுகிறேன். இதன் தொடர்பில், ஓர் அவரச பொதுப் பேரவை நடத்தப்பட்டு ஹிண்ட்ராப் இயக்கத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்பிறகு, ஹிண்ட்ராஃப் வழக்கம்போல மலேசிய இந்திய சமுதாயத்திற்கான கண்காணிப்புப் பணியை தொடர்ந்து மேற்கொள்ளுமென்றும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.