தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் போலிஸ் புகார்!

சிலிம்ரிவர், ஜூலை 16-

அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் சிலிம் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டக் கருத்துப் பதிவை ஒட்டி இங்குள்ள தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போலிஸ் புகாரையும் செய்துள்ளனர்.

இரகசியக் காப்புக்கு உட்பட்டத் தகவலை அந்த சட்ட மன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ளதாகவும், மாவட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பேசப்பட்டு இன்னும் ஆவணப்படுத்தப்படாத சில செய்திகளையும் பொய்யான கூற்றுகளையும் வெளியிட்டு மாவட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட மன்றம், நடப்பு மாநில அரசாங்கம் ஆகியவற்றுக்குக் கலங்கம் விளைக்கும் வகையில் அந்த முகநூல் பக்கக் கருத்து அமைந்திருப்பதாக போலிஸ் புகாரளித்த தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்ற உறுப்பினர் ஜுனைடா தெரிவித்தார்.

மாவட்ட மன்ற உறுப்பினர்களுக்கானக் கூட்டம் நடத்தி அங்குப் பேசப்பட்டச் செய்திகள் முறையான அறிக்கையாக தயாராவதற்குள் அதில் சில செய்திகளை இந்தச் சட்டமன்ற உறுப்பினர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், பதிவிடப்பட்ட அந்தச் சட்ட மன்ற உறுப்பினரின் செய்தியில், சில தவறான கருத்துகளும் ஆதாரமற்றக் குற்றச்சட்டுகளும் இணைக்கப் பட்டிருந்ததாகவும் இன்னொரு மாவட்ட மன்ற உறுப்பினரும் ஜனநாயக செயல் கட்சியின் (DAP) பிரதிநிதியுமான சுப்ரமணியம் தெரிவித்தார்.

சுதந்திர நாட்டில் ஒவ்வொரு தனி மனிதரும் தங்களின் சொந்தக் கருத்தைச் சொல்வதில் எந்தத் தடையுமில்லை. ஆனால், இதுபோன்ற தவறானச் செய்தியையும் பொய்யானத் தகவலையும் பொதுமக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் எனும் அடிப்படையில் வழங்குவது பல தவறான விளைவுகளைச் சமூகத்துக்குக் கொடுக்கும் என அந்த சட்டமன்ற உறுப்பினர் அறிந்திருக்க வேண்டும் என்று தஞ்சோங் மாலிம் வட்டார மக்கள் நீதிக் கட்சியின் (PKR) மகளிர் பிரிவுத் தலையுமான ஜுனைடா கூறினார்.

எனவே, முறையான ஆவணமாகத் தயாரிக்கும் முன்னரே அக்கூட்ட்த்தில் பேசப்பட்டத் தகவலை வெளியிட்டது யார் எனவும் நடப்பு அரசாங்கத்தின் மாண்புக்குக் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டோர் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் பிரதிநிதியும் மாவட்ட மன்ற உறுப்பினருமான விஜயகுமார் தெரிவித்தார்.