கோலாலம்பூர் ஜூலை 16-
யோகாசனத்தின் அற்புதத்தை மலேசியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதில் இருக்கும் மகத்துவத்தை அவர்கள் உணர்ந்து கொண்டால் அவர்கள் வாழ்வு யோகாசனம் ஒன்றி விடும் என மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பகுதி தலைவர் தினாளன் ராஜகோபால் தெரிவித்தார்.
இளைஞர் மத்தியில் இந்த யோகாசனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஐந்தாவது உலகளாவிய யோகா 2019 மிக விமரிசையாக நடைபெறுகின்றது.
ஜூலை 20 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜெஸ்மின் மாநாட்டு மண்டபத்தில் இது நடைபெறுகின்றது. இந்த உலகளாவிய யோகா தினத்தில் ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியர்களின் யோகப் பயிற்சி என்பது தற்போது மிகப்பெரிய அடைவு நிலையை பதிவு செய்திருக்கின்றது. நமது முன்னோர்கள் யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு தகவல்களை நமக்கு வழங்கிச் சென்றுள்ளனர். தற்போது இந்துக்கள் மட்டுமின்றி யோகாவை அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என அவர் தெரிவித்தார்.
அதனால் இந்த யோகா தினத்தில் மூவினமும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தினாளன் குறிப்பிட்டார். மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பகுதி, மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார அறவாரியம் இணைந்து நடத்தும் இந்த யோகா தினத்தில் மலேசியாவிற்கான இந்திய தூதரகமும் பங்கு பெறுகின்றது.
இந்த மாபெரும் விழாவில் பங்கேற்க இதுவரையில் 400 பேர் முன் பதிவு செய்திருக்கின்றார்கள். அன்றைய தினம் ஆயிரம் பேர் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார வாரியத்தின் தலைவர் செனட்டர் டி மோகன் தெரிவித்தார்.
யோகா என்பது உடல் தேகப் பயிற்சி. இதில் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டால் உடல் ரீதியில் மிகப்பெரிய வலிமையை பெறுவார்கள். அதனை அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய முயற்சிதான் இது என மோகன் குறிப்பிட்டார்.