கோலாலம்பூர், ஜூலை 17-

வேதமூர்த்தியின் இன அடிப்படையிலான புதிய கட்சி இன ஒற்றுமைக்கு தவறான முன்னுதாரணமாக விளங்குகிறது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார்.

பிரதமர் துறை அமைச்சர் பொன் வேதமூர்த்தியின் மலேசியர் முன்னேற்றக் கட்சியை ஆர்ஓ எஸ்எனப்படும் சங்கங்களின் பதிவிலாக்க அங்கீகரித்துள்ளது. இக்கட்சி குறித்து வேதமூர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அது குறித்து சார்ல்ஸ் சந்தியாகோ கருத்துரைத்த போது, ஓர் இன ரீதியிலான கட்சியை அமைப்பதற்கு வேதமூர்த்திக்கு எல்லா உரிமையும் உண்டு ஆனால் இன ஒற்றுமை யிலான அணுகுமுறைகள் நம்பிக்கைக் கூட்டணியின் ஒற்றுமைக்கு முரணானவை என்றார் அவர்.

இந்த சூழ்நிலையில் வேதமூர்த்தி தனது கட்சி விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அதாவது ஓர் இனத்திற்கு தலைவராக இருக்க விரும்புகிறாரா அல்லது ஒட்டுமொத்த மலேசியர்களுக்கு அவர் தலைவராக இருக்க விரும்புகிறாரா என்பது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.

நம்பிக்கை கூட்டணி அரசு பல்லின மக்கள் என்ற அடிப்படையில் தனது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் பல்லின மக்கள் எதிர்நோக்கி வரும் வறுமை, சமத்துவம் உட்பட பல விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நம்பிக்கைக் கூட்டணி அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

புதிய கட்சி தொடங்குவது வேதமூர்த்தியின் தனி உரிமை. ஆனால் தற்போதைய நாட்டின் சூழ்நிலையில் இன ரீதியிலான கட்சியை யாரும் விரும்ப மாட்டார்கள் என நான் கருதுகிறேன். அதே நேரத்தில் நம்பிக்கை கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் பெர்சத்து கட்சி மலாய்க்காரர்களின் கட்சியாக விளங்குவதையும் நான் மறுக்கவில்லை. இருந்தபோதிலும் அக்கட்சி அம்னோ மீது அதிருப்தி அடைந்தவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில்தான் தொடங்கப்பட்டது.

ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை அப்படியல்ல. ஜனநாயக செயல் கட்சி (ஜசெக) மக்கள் நீதிக்கட்சி (பிகேஆர்) ஆகிய கட்சிகளில் அதிகமான இந்தியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதேவேளையில் அமானா கட்சியிலும் இந்தியர்கள் உள்ளனர் என்று ஜனநாயக செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சார்லஸ் சந்தியாகோ செய்தியாளர்களிடம் கூறினார்.