ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அமைச்சரவையில் மாற்றம் ?
முதன்மைச் செய்திகள்

அமைச்சரவையில் மாற்றம் ?

புத்ராஜெயா, ஜூலை.19-

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அமைத்து ஓராண்டு நிறைவுப் பெற்றிருக்கும் வேளையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தலைமையேற்றுள்ள அமைச்சரவையில் மாற்றம் வரும் என பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக ஹஜ்ஜூ பெருநாளுக்குப் பின்னர் டாக்டர் மகாதீர் தமது அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என்று உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் கூடிய அமைச்சரவை கூட்டத்துக்கு முன்பாக, அமைச்சர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் ஜூலை 19 வரையிலான அமைச்சரவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை மூலத் தொழில்துறை அமைச்சர் திரேசா கோக்கும், பிரதமர்துறை அமைச்சர் டத்தோ லியூ வியூ கியோங்கின் அதிகாரி ஒருவரும் முகநூலில் பதிவேற்றம் செய்ததை அடுத்து விரைவில் அமைச்சரவையில் மாற்றம் வரும் என பேசப்படுகிறது.

எப்போதும் அமைச்சரவை அமைக்கப்பட்டப் பின்னர் முதல் கூட்டத்தின்போதும்,  நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக நடைபெறும் கடைசி அமைச்சரவை கூட்டத்தின்போதும் புகைப்படம் எடுக்கப்படும். அதேவேளையில், ஆட்சிக் காலத்தின் இடையில் அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒருசேர குழுப் படம் எடுத்துக் கொண்டால், அதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் வரும் என பரவலாக பேசப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் அனைவரும் குழுப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து துன் டாக்டர் மகாதீர் தமது அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டு வருவார் என சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. அதேவேளையில் டாக்டர் மகாதீரையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர் எப்போது என்ன முடிவு எடுப்பார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

பி.கே.ஆர் கட்சியில் அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கும் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலிக்கும் இடையில் மிகப் பெரிய பனிப்போர் நீடித்து வரும் வேளையில், டாக்டர் மகாதீர் அமைச்சரவையில் மாற்றம் செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளையில் இந்த அமைச்சரவை மாற்றத்தில் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசாவின் நிலையும் கேள்வி குறியாகலாம்.

அன்வார் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டால், வான் அசிசா அமைச்சரவையில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் துன் டாக்டர் மகாதீரிடம் இருந்து பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு ஏதுவாக, அன்வார் விரைவில் துணைப் பிரதமராக நியமிக்கப்படலாம் என்றும் ஆருடம் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன