ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தோழியின் தாயார் தாக்கியதால் சுயநினைவு இழந்த மாணவி ரஜினிதா; மாணவியின் நலன் கருதி ஏ.கே ராமலிங்கம் போலீஸ் புகார்
சமூகம்முதன்மைச் செய்திகள்

தோழியின் தாயார் தாக்கியதால் சுயநினைவு இழந்த மாணவி ரஜினிதா; மாணவியின் நலன் கருதி ஏ.கே ராமலிங்கம் போலீஸ் புகார்

செராஸ், ஜூலை 19-

செராஸ் தாமான் ஷாமிலின், ஸ்ரீ பிந்தாங் செலாத்தாங் தேசியப் பள்ளியின் மாணவி ரஜினிதா தனது தோழியின் தாயார் தாக்கியதால் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அந்தப் பெண்மணி அடித்ததில் ரஜினிதா ஒரு நாள் முழுக்க நினைவிழந்த  நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக மஇகா நிர்வாகச் செயலாளர் ஏகே ராமலிங்கம் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 2ஆம் தேதி இவர் பள்ளிக்கு புதிய கலர் பென்சில் பெட்டியைக் கொண்டு வந்துள்ளார். ஓய்வு நேரத்திற்கு பின்னர் பென்சில் பெட்டி தனது புத்தகப் பையில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த ரஜினிதா அருகில் இருந்த சக மாணவியின் புத்தகப் பையை திறந்து பார்த்தபோது அதில் அந்த கலர் பென்சில் பெட்டி இருந்துள்ளது.

எதற்காக இப்படி கேட்காமல் எனது கலர் பென்சில் பெட்டியை எடுத்தாய் என்று அந்த மாணவியிடம் கேட்டுள்ளார். அவர் உடனே தொலைப்பேசியின் வழியாக தனது தாயாருக்கு அழைத்து அவரை வரவழைத்துள்ளார்.

வகுப்பறைக்குள் நுழைந்த அந்த மாணவியின் தாயார் ரஜினிதாவை ஏதும் கேட்காமல் அடித்துள்ளார். பலத்த காயங்களுக்கு ஆளான ரஜினிதா தனது தந்தையை அழைத்துள்ளார்.

ரஜினிதாவை அவரது தந்தை ரமேஸ் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் மறுநாளே கண் விழித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மறுநாள் 3ஆம் தேதி ரமேஸ், செராஸ் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் தொடர்பில் காவல் துறையும் அந்தப் பெண்மணியை கைது செய்து ஒரு நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து அனுப்பிவிட்டது.

பள்ளியிலிருந்து ஒருவர் கூட இந்த மாணவியை சந்தித்து நலம் விசாரிக்கவில்லை. அந்தப் பெண்மணி ரஜினிதாவை தாக்கியபோது வகுப்பறையில் மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.  இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகம் இதுவரை எவ்வித போலீஸ் புகாரும் செய்யவில்லை.

ரஜினிதாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு தக்க நியாயம் கிடைக்க வேண்டும். இவரின் விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் ஏன் அலட்சியம் காட்டியது? எதற்காக புகார் செய்ய மறுக்கிறது என்பதற்கு முறையாக விளக்கமளிக்க வேண்டும்.

காவல்துறையும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணியின் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியமைச்சு பள்ளி நிர்வாகத்தின் மீதும் கல்வி இலாகா மீதும் முறையான விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே செராஸ் காவல் தலைமையகத்தில் தாம் புகார் செய்ய வந்திருப்பதாக உமாராணி குழுமத்தின் இயக்குநருமான ராமலிங்கம் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன