ஆட்சி கலைய வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்! – டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன்

கோலாலம்பூர் ஜூலை 22-

நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி கலைக்கப்பட்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள் என்று மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெற்று வாக்குறுதிகளை அவர்கள் வழங்கியதால் மக்கள் வெறுப்புக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இளைஞர்களை கவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவர்கள் வழங்கிய எந்த வாக்குறுதியும் இதுவரையில் நிறைவேற்றவில்லை.

ஆட்சி அதிகாரத்தை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றினால் மறுநாள் பெட்ரோல் விலை 1.50 காசாக நிலை நிறுத்தப்படும் என வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால் ஓராண்டு ஆகிய பிறகும் இதுவரையில் பெட்ரோல் விலையை நிலைநிறுத்துவதில் அவர்கள் தோல்வி கண்டு இருக்கிறார்கள்.

பிடிபிடிஎன் கடனுதவி பெற்ற மாணவர்கள் 4000 வெள்ளி ஊதியத்தை எட்டும் வரை அதனை செலுத்த வேண்டாம் என கூறினார்கள். ஆனால் இன்று அனைத்திலும் கெடுபிடி வழங்கி வருகிறார்கள். இதனால் மாணவர்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பதையும் டத்தோஶ்ரீ தனேந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஜி.எஸ்.டி. வரி தான் இந்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பு என நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். நாங்கள் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டியை ஒழிப்போம் என்றார்கள். அதற்கு பதிலாக வேறு ஒரு வரியை வசூலிப்போம் என அவர்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. இப்போது எஸ்எஸ்டி வரி மக்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்பாட்டில் இல்லை என்ற குறை மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவுகின்றது.

இந்தியர்கள் என்று எடுத்துக்கொண்டால் 100 நாட்களில் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என நம்பிக்கைக் கூட்டணி தெரிவித்தது. குடியுரிமை உட்பட எந்த ஒரு விவகாரத்திற்கும் இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என்பது தான் நிசப்தமான உண்மை என்பதையும் தனேந்திரன் சுட்டிக்காட்டினார். இதனால் மக்கள் நம்பிக்கைக் கூட்டணியின் மீது நம்பிக்கையை இழந்து உள்ளார்கள்.

ஆட்சி கலைய வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது. அதனால் ஆட்சி கலைக்கப்பட்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தனேந்திரன் வலியுறுத்தினார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற மக்கள் சக்தியின் பேராளர் மாநாட்டில் 800க்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்டார்கள் என்பதையும் அவர் தெரிவித்தார். பேராளர்கள் முகத்தில் வெற்றி பிரகாசம் தற்போது தெரிகின்றது. மக்கள் எது உண்மை என்பதை உணர்ந்து விட்டார்கள். அதனால் வரும் தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை மக்கள் சக்தி கட்சி ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

அதோடு 5 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 9 சட்டமன்ற தொகுதிகளையும் மக்கள் சக்தி அடையாளம் கண்டுள்ளது. இத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இங்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்பதையும் தேசிய முன்னணி தலைமைத்துவத்தின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளதையும் அவர் தெரிவித்தார்.